கவளம் கவளமாக வாய்க்குள் போகும் சாப்பாடு.. அசத்தும் "ராமன்"!
சென்னை: சாப்பிடுவது யாருக்குத்தான் பிடிக்காது? டயட் டயட் என்பார்கள்.. இவர்கள் முன்னால் கம கமக்கும் சாப்பாட்டை சுடச்சுட வைத்துவிட்டால். நாவில் நீர் ஊற டயட்டை பறக்க விட்டுவிடுவார்கள்.
சாப்பாட்டை பார்த்துவிட்டால் இந்த பிறவிதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைத்ததுன்னு பாடத்தான் தோன்றும். வயிறு நிறைய சாப்பிட்டால்தான் மனதும் சாப்பிட்ட திருப்தியில் நிறையும்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் 50 பரோட்டாவை நடிகர் சூரி சாப்பிடுவார் அப்படி ஒரு சாப்பாட்டு ராமனாக இருக்கிறார் சபரி குமார். யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமடைந்துள்ள இவர் சாப்பாட்டை கவளம் கவளமாக சாப்பிடும் அழகே தனி.

சாதம் 9 பிளேட்
9 பிளேட் சாதத்தை தனது முன் வைத்துக்கொண்டு மணித்துளிகள் ஓடும் மிஷினை அமுக்கி.மிக குறுகிய நிமிடங்களில் அத்தனைத் தட்டு சாப்பாட்டையும் கவளம் கவளமாக உருட்டி அப்படியே சிந்தாமல் சிதறாமல் வாய்க்குள் நுழைத்து விடுகிறார். மீன் குழம்பு, ரசம், தயிர், ரசத்துடன் தயிர் சேர்த்து என்று கலந்துக்கட்டி அடிக்கிறார்.

நாட்டு கோழி பிரியாணி
இவர் இரண்டரை கிலோ நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிட்டதை 5 பில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். கோழிக் கறியை சேர்த்து சாதத்தை சாப்பிடுகிறார். தயிர் பச்சடியும் உண்டு.லெக் பீசும் இழுத்து கடிச்சு சாப்பிடுகிறார். இப்படி 3 ஆட்டு ஈரல், இரண்டு ஆட்டு குடல் என்று சாப்பிட்டு சாதனை செய்கிறார்.

50 வடை
50 பூரி 50 வடைகள் என்று டிஷ் பெயர் சொல்லியும் வியூவர்ஸ் சாப்பிட சொல்லி வீடியோவை போட சொல்கிறார்களாம். மனிதருக்கு ஒரு பூரி ஒரு வாய்க்குத்தான்.அதே போல ஒரு வடை ஒரு வாய்க்குத்தான். முட்டை என்றால் வெகு அசால்ட்டாக முழு முட்டையை வாயில் போட்டு சாப்பிட்டு விடுகிறார்.

சாப்பாட்டு ராமன்
சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் ஆரம்பித்து ஒரு வருடம் ஆனதைக் கொண்டாடும் வகையில்,வெட்ட வெளியில் பெரிய பாத்திரங்கள் வைத்து அதிகம் சமைக்க முடிவு செய்திருக்கிறார்கள். சாதம், சாம்பார், ரசம், பொரியல், வடை ,பாயசம், அப்பளம் என்று அமர்க்களப்படுத்தி, நிறைய புடவைகள் வேஷ்டியோடு ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுக்கு அன்னமிட்டு பரிமாறி சாப்பிட வைத்து மகிழ வைத்து இருக்கிறார் சபரிசங்கர்.
ஆதரவற்ற முதியோர்கள் அந்த சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவது பார்க்க நன்றாக இருக்கிறது. எச்சரிக்கை என்று அவரே வீடியோவில் யாரும் இதை முயற்சி செய்யாதீர்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
