தடை இருக்கட்டும்! "முத்தமழையை" தொடர்ந்து வாய்ப்பு மழை! இமான் இசையில் சின்மயி!
சென்னை: பாடகி சின்மயி மீதான தடை இருந்து வரும் நிலையில் அவர் இசையமைப்பாளர் டி.இமான் இசையில், கவிஞர் சினேகன் வரியில் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏற்கெனவே முத்தமழை மூலம் கம் பேக் கொடுத்த சின்மயி தற்போது இமான் இசையில் மீண்டும் வந்திருக்கிறார்.
சன் டிவியில் ரமணன் நடத்திய நிகழ்ச்சியில் சின்மயி பாட வந்தார். அவரது தனித்துவமான குரலால் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2002 ஆம் ஆண்டு முதல் பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

அவர் டப்பிங் கலைஞரும் ஆவார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுக்கும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கும், விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவுக்கும் சுராவில் தமன்னாவுக்கும், ஸ்ரீராமராஜ்ஜியத்தில் நயன்தாராவுக்கும் மாற்றானில் காஜல் அகர்வாலுக்கும் 96, லியோவில் த்ரிஷாவுக்கும் சின்மயி டப்பிங் பேசியுள்ளார்.
ஆதவன் படத்தில் இடம்பெற்ற வாராயோ வாராயோ பாடல், எந்திரனில் கிளிமஞ்சரோ, நண்பன் படத்தில் அஸ்கு லஸ்கா, சிவாஜி படத்தில் சஹானா பாடலையும் பாடியுள்ளார். இவர் இந்த பாடல்களுக்காக விருதையும் பெற்றார்.
இந்த நிலையில் மீ டூ மூலம் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்த சின்மயிக்கு திரைத்துறையில் பாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. அதையும் மீறி அவரை யாராவது தொடர்பு கொண்டாலும் அவர்கள் அழுத்தத்திற்குள்பட்டு சின்மயிக்கு பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இசை நிகழ்ச்சிகளை தவிர்த்து தமிழ் படங்களில் சின்மயி பாடல்களை பாடவில்லை. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் பாடல்களையே படியுள்ளார். அண்மையில் தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலுக்காக பெரிய வரவேற்பை பெற்றார். இவர் பாடிய பாடலை யூடியூபில் 1.4 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இப்படியொரு அற்புதமான குரலை தேவையில்லாத காரணங்களுக்காக கட்டி போட்டுள்ளது தமிழ் சினிமாவுக்கு அவமானகரமானது என பலர் சின்மயிக்கு ஆதரவாக பேசினர். மேலும் சின்மயி மீதான தடைகளையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சின்மயி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்னை அழைத்த ஒருவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் உங்கள் மீதான டப்பிங் யூனியன் தடையை நீக்குகிறோம் என்றார். செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என கூறி மறுத்துவிட்டேன் என்றார்.
கங்கை அமரன், விஜய் ஆண்டனி உள்ளிட்டோரும் சின்மயிக்கு ஆதரவாக இருந்த நிலையில் இசையமைப்பாளர் இமான் தனது இசையில் சின்மயியை பாடவே வைத்து விட்டார். கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஒரு திரைப்படத்திற்காக சின்மயி பாடியுள்ளார்.
சினேகன் வரிகளில் அந்த பாடல் அமைந்துள்ளது. சின்மயியுடன் எடுத்த புகைப்படத்தை இமான் வெளியிட்டுள்ளார். என் மனதிற்கு பிடித்தவருடன் மேஜிக்கல் மியூசிக்கை உருவாக்குவோம் என இமான் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications