OTT This Week: இந்த வாரம் ஓடிடி செம! தங்கலான், மெய்யழகன், லப்பர் பந்து.. சூப்பர் ஹிட் படங்கள்
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வருடம் தமிழில் வெளியான முக்கியமான படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் இந்த வாரம் வரிசைகட்டி வெளியாகவுள்ளன. கடந்த மாதம் பலமுறை தள்ளிப்போடப்பட்ட 'தங்கலான்' படத்திற்கு தீபாவளிக்கு ஓடிடி வெளியீடு நிச்சயிக்கப்பட்டுள்ளது. நல்ல பாராட்டு பெற்ற 'மெய்யழகன்' படமும் வெளியாகிறது. லப்பர் பந்தும் துள்ளக் காத்திருக்கிறது.
'தங்கலான்' முதல் 'லப்பர் பந்து', 'மெய்யழகன்' வரை, நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜீ5, ஜியோ சினிமா உள்ளிட்ட ஓடிடி தளங்களில் தீபாவளியை முன்னிட்டு இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியலை இதோ பாருங்கள்.

தங்கலான் (நெட்ஃபிளிக்ஸ்): ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த தங்கலான் ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. கர்நாடகாவின் கோலார் தங்கச் சுரங்கப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் சம்பத் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் ட்ராமா பேன்டஸி கதையம்சம் கொண்ட இப்படம் அக்டோபர் 31, அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

மெய்யழகன் (நெட்ஃபிளிக்ஸ்): இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு சுமார் 40 வயதான மனிதன் தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார். தனது சொந்த ஊரில் வாழத் தொடங்கிய பிறகு, தனது இழந்த மகிழ்ச்சியை மீட்டுகிறார். ஃபீல்குட் மூவியான இந்த படத்தில் கார்த்தி, அர்விந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, சுவாதி கொண்டே, ராஜ்கிரன் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. மெய்யழகன் அக்டோபர் 25 அன்று நெட்ஃபிளிக்சில் வெளியாகும். முன்னதாக அக்டோபர் 27ம் தேதி மெய்யழகன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

லப்பர் பந்து (டிஸ்னி+ஹாட்ஸ்டார்): அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா, தேவதர்ஷினி மற்றும் கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் லப்பர் பந்து. படம் செப்டம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. அக்டோபர் 31ம் தேதி முதல் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. நடுத்தர வயது உள்ளூர் கிரிக்கெட் வீரருக்கும், வளரும் தலைமுறையைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரருக்கும் நடக்கும் ஈகோ மோதல்களுக்கு இடையே, காதல், குடும்பம், நகைச்சுவை என திரையைவிட்டு கண்ணை விலக்க முடியாத அனுபவம் கொடுத்த லப்பர் பந்து ஓடிடியிலும் சாதிக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications