Thug Life Review: திரிஷா - அபிராமி - சஞ்சனா.. பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் தக் லைஃப்! 50 வருட பழைய ஆபாசம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தக் லைஃப்' திரைப்படம், மோசமான திரைக்கதை என்பதை தாண்டி பல்வேறு விஷயங்களுக்காக கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மோசமான பாலியல் ரீதியான கருத்துக்கள், பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் இந்த படம் முழுக்க நிரம்பி வழிகிறது.
முக்கியமாக வில்லன் செய்யும் அதே பாலியல் அத்துமீறல்களைத்தான் ஹீரோவும் பல இடங்களில் செய்கிறார். என்ன வில்லன் செய்யும் போது தவறாக காட்டப்படும் அந்த விஷயங்கள் ஹீரோ செய்யும் போது ஹீரோயிசமாக சித்தரிக்கப்படுகிறது.
ஒழுக்கக்கேடு
இந்த பாலியல் அத்துமீறல்களின் மையத்தில் கமலின் கதாபாத்திரம் உள்ளது. அவர் தன்னைவிட 30 வயது குறைவான ஒரு விலைமாதுவுடன் (திரிஷா நடித்தது) தொடர்பில் இருக்கிறார். தான் மகன் போன்று வளர்க்கும் சிம்புவின் தங்கையை தேடி விலைமாதுகளின் வீடுகளுக்கு செல்லும் கமல்ஹாசன்.. (இதுவே பல கேள்விகளை எழுப்பும் விஷயம்).. அங்கே கண்டுபிடிக்கும் ஒரு பெண்ணை தனது மகள் போலவே பார்த்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த பெண்ணை தனது பாலியல் அத்துமீறல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். கமல் இறந்ததாக கருதப்பட்ட பின்னர் சிம்பு அந்த பெண்ணை.. அதாவது திரிஷாவை தனது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.

ஒரு பெண்ணை தவறான தொழிலில் இருந்து "காப்பாற்றுவதாக" ஆரம்பிக்கும் கதை, விரைவில் இரு ஹீரோக்களும் அதே பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டுவதாக கதை மாறுகிறது. கடைசி வரை திரிஷாவின் கதாபாத்திரத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மாறாக, அவள் இரண்டு ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்கு.. இடையே கால்பந்து போல இங்கும் அங்கும் பந்தாடப்படுவதாக கதை எழுதி உள்ளார் மணிரத்னம். 2025ம் ஆண்டில்.. இவ்வளவு பிற்போக்கான கதையை எடுக்கும் அளவிற்கு மணிரத்னம் தாழ்ந்து போய் இருக்கிறார்.
அதிலும் படத்தின் தொடக்கத்தில் பெண்களிடம் தவறாக நடக்கும் வில்லன் மகனை கொல்லும் கமல்.. பின்னர் கதை முழுக்க அதே செயலைத்தான் பாலிஷாக செய்து கொண்டு இருக்கிறார்.
சகோதரியை தேடும் படலம்
மிகவும் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவென்றால், கமலின் கதாபாத்திரம் ஒரு பெண்ணுடன் (ஐஸ்வர்யா லெக்ஷ்மி) சாதாரணமாக flirt செய்கிறார், ஆனால் பின்னர் அவர் சிம்புவின் நீண்டகாலமாக காணாமல் போன சகோதரி என்று தெரியவருகிறது. . மேலும், கமலின் கதாபாத்திரம் சிம்புவின் தங்கையை தேடி விபச்சார விடுதிகளுக்கு செல்வதும்.. அதுவும் 20 வருடங்களுக்கு பின் செல்வதும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதெல்லாம் போக சஞ்சனா திருமணத்தின் போது.. சிம்புவை பார்த்து திரிஷா சோகமாக இருக்கிறாயா என்று கேட்கும் போது.. சஞ்சனா என் தங்கை.. அவர் என் டைப் அல்ல என்று கூறுவார் சிம்பு. அதுவே சர்ச்சைக்குரிய விஷயம். இரண்டில் ஒன்று சொல்ல வேண்டும். ஒன்று சஞ்சனா என் தங்கை.. இல்லை என்றால் அவர் என் டைப் அல்ல என்று சொல்லலாம். ஆனால் சிம்பு இரண்டையும் கூறுவார். அப்படி என்றால் சஞ்சனா அவரின் டைப்பாக இருந்தால்.. தங்கையை திருமணம் செய்வாரா என்று கேட்கும் அளவிற்குத்தான் படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார்கள்.
இதில் இன்னொரு பக்கம் அபிராமி போன்ற நடிகையை அழைத்து வந்து.. கடைசி வரை கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொள்ளும்.. பொம்மை போல கதை எழுதி உள்ளார்.
திரைப்படம் முழுவதும் மீண்டும் மீண்டும் incest போன்ற காட்சிகளை நேரடியாக - மறைமுகமாக கொண்டுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்று கூட தேவையான உணர்திறன் அல்லது தீவிரத்துடன் கையாளப்படவில்லை. இப்படி எல்லாம் எடுத்தால் அது பெரிய விவாதம் ஆகும்.. கல்லா கட்டலாம் என்று நினைத்திருப்பார் போல மணிரத்னம். ஆனால் அலைபாயுதே , ஓகே கண்மணி போல நியூ வேவ் கதையாக இல்லாமல்.. மஞ்சள் பத்திரிகையின் நடுப்பக்க கதை போல மாறி உள்ளது இந்த படம்.
பல அடுக்குகளைக் கொண்ட ஒரு க்ரைம் - ஆக்சன் கதையாக இருக்க வேண்டியது. பலான கதையாக மாறி விட்டது. படத்தில் கமலை டான் என்று காட்டும் மணிரத்னம்.. அவர் ஏன் டான்.. அவர் என்ன செய்கிறார்.. அவரின் வேலைதான் என்ன.. திரிஷா - அபிராமி பின் செல்வதை தவிர அவருக்கு வேறு வேலை இருக்கிறதா என்பதை கடைசி வரை காட்டவே இல்லை.
'தக் லைஃப்' திரைப்படத்தில் நடிகர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், திரைக்கதை சரியாக இல்லாததால், இந்த திரைப்படத்தை பார்ப்பது மிக மோசமான அனுபவமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications