குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை! அண்ணி தேனிக்கு போனதுமே இதுதான் நடந்தது.. கலங்கிய பாரதிராஜா தம்பி
சென்னை: பொதுவாக 21 குண்டுகள் முழங்கத்தான் அரசு மரியாதை செலுத்துவார்கள், ஆனால் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு 72 குண்டுகள் முழங்க மிகப்பெரிய அளவில் அரசு மரியாதை வழங்கி கவுரவித்தார்கள், இதைப் பெறுவதற்குத் நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத் திட்டங்கள், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தல் குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது.

"அண்ணன் பாரதிராஜாவின் நினைவாக தேனியில் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டால், எங்களுக்குள் ஒரு திட்டம் இருக்கிறது. இப்போதே வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு, சாமி கும்பிட்டுச் செல்கிறார்கள்.
எனவே, அங்கு ஒரு நினைவுக் கூடமோ அல்லது மண்டபமோ கட்டினால் வரும் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இதனை யார் முன்னின்று எடுத்துச் செய்வது என்பது குறித்துக் குடும்பத்தினருடன் விரிவாக உட்கார்ந்து பேச வேண்டும்.
பாரதிராஜாவின் நினைவிடம்
என் அண்ணனின் நினைவிடம் அமைந்துள்ள 'காட்ரோடு' பகுதி ஒரு அற்புதமான சந்திப்பாகும். அது கொடைக்கானல், குமுளி, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பிரதான ஜங்ஷன் ஆகும். இதுவரை பிரபலமாகாமல் இருந்த அந்த இடம், தற்போது பொதுமக்கள் தினசரி வந்து செல்லும் ஒரு முக்கிய நிறுத்தமாக மாறியுள்ளது. பாரதிராஜாவின் நலம்விரும்பிகள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தை ஒரு முக்கிய அடையாளமாக உருவாக்க வேண்டும் என்பது என் ஆசை.
எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், அதாவது கருமாத்தூர் மற்றும் குலதெய்வ வட்டார மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் சமுதாயத்தின் மிகப்பெரிய மாமனிதரான பாரதிராஜாவுக்குச் சென்னையிலோ அல்லது மதுரையிலோ ஓர் ஆளுயரச் சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிச் சடங்கு காரியங்கள் அனைத்தும் முழுமையாக முடிந்த பிறகு, நான் நேரில் சென்று இந்தக் கோரிக்கையைப் பற்றிப் பேசி தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய உள்ளேன்.
ஜெயராஜ் எங்கே என்று கேட்ட இளையராஜா
அண்ணன் காலமான செய்தி தெரிந்த உடனேயே, இசைஞானி இளையராஜா முதலாவதாக நேரில் வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் 'ஜெயராஜ் எங்கே? ஜெயராஜைக் காணோம்?' என்று விசாரித்துள்ளார். நான் தேனியில் இருந்ததால் அந்தச் சமயத்தில் அங்கு இருக்க முடியவில்லை.
அவர் அன்று மதியமே ஒரு சிம்பொனி இசை நிகழ்ச்சி மற்றும் 10 நாள் இசைத் திட்டத்திற்காக மும்பை சென்றுவிட்டார். அவர் வரும் 22ம் தேதி வாக்கில் சென்னை திரும்புவார் என்று நம்புகிறேன். அவர் வந்த பிறகு, நான் நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன்.
அண்ணனை கவனித்து கொண்ட அண்ணி
அண்ணனின் மறைவிற்குப் பிறகு அவருடைய புகழையும் படைப்புகளையும் ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து கொண்டாடுவது எங்களின் கடமையாகும். நாங்கள் செய்யத் தவறினாலும் கூட, அண்ணனின் படைப்புகள் மீது வெறித்தனமான பற்றும் அன்பும் கொண்ட கோடிக்கணக்கான "பைத்தியக்கார ரசிகர்கள்" வெளியுலகில் இருக்கிறார்கள், அவர்களே அதனைச் செய்துவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
தேனியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்குப் பிரம்மாண்டமான மக்கள் கூட்டம் வந்தது. ஒருவேளை தமிழக அரசு இதில் தலையிட்டு, தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்காமல் இருந்திருந்தால், அந்தக் கூட்டத்தைச் சமாளிப்பது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருந்திருக்கும். மிக நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் அத்தனையையும் அரசு செய்து முடித்துள்ளது.
முதலமைச்சருக்கு மிகப்பெரிய நன்றி
இந்த இக்கட்டான தருணத்தில் இவ்வளவு பெரிய சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. முதலமைச்சர் இந்த அளவிற்குச் செய்வார் என்று நாங்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அரசு மரியாதையை என் அண்ணனுக்கு உருவாக்கிக் கொடுத்ததற்காக, எங்கள் பரம்பரை உள்ளவரை காலம் முழுக்க அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்போம்.
பொதுவாக 21 குண்டுகள் முழங்கத்தான் அரசு மரியாதை செலுத்துவார்கள், ஆனால் அண்ணனுக்கு 72 குண்டுகள் முழங்க மிகப்பெரிய அளவில் அரசு மரியாதை வழங்கி கவுரவித்தார்கள், இதைப் பெறுவதற்குத் நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
தேனிக்கு கூட்டிட்டு போங்க
அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத போது, "என்னை தேனிக்குக் கூட்டிட்டு போங்க" என்று ஆசைப்பட்டார்.. ஆனால், தேனிக்கு அழைத்துச் சென்றால் அவசர காலத்திற்கு உடனடியாகக் கவனிக்க ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அங்கு அழைத்துச் செல்லவில்லை.
சென்னையிலேயே இருந்தால் ராத்திரி நேர அவசரத்திற்கு மருத்துவமனை, டாக்டர்கள், நர்ஸ்கள் என அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் என்பதால் இங்கேயே வைத்திருக்க முடிவு செய்தோம்... அவரது உடல்நிலை இன்னும் நன்றாக தேறிய பிறகு தேனிக்குக் கொண்டு போய் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம்.
குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதை
கடைசிவரை அண்ணன் உடல்நலத்தோடுதான் இருந்தார். ஆனால், குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதை போல அண்ணி ஊருக்குச் சென்ற நேரத்தில் இந்தத் துக்க நிகழ்வு எதிர்பாராமல் நடந்துவிட்டது.
இறுதி நேரத்தில் அருகில் யாரும் இருக்க முடியாமல் போனது எங்களுக்கும் அண்ணிக்கும் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டதே தவிர, யாரும் அவரைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லவில்லை
அண்ணன் பாரதிராஜா இல்லாமல் அண்ணியாரால் (திருமதி சந்திரலீலா) ஊரில் தனியாக இருக்க முடியாது என்பதால், அவர் இனி சென்னையில்தான் இருக்கப் போகிறார்.
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
சமீபத்தில் நான் கவிஞர் முத்துலிங்கம் அவர்களிடம் பேசும்போது அவர் ஒரு சுவாரசியமான தகவலைக் குறிப்பிட்டார். '"புதுநெல்லு புதுநாத்து" திரைப்படத்தில் முத்துலிங்கத்தை வைத்தே பாடல் எழுத வேண்டும் என்று அண்ணனிடம் அண்ணியார்தான் பரிந்துரைத்துள்ளார். அப்படி எழுதப்பட்ட பாடல்தான் "கருத்தமச்சான்" என்ற புகழ்பெற்ற பாடலாகும்.
இதன் மூலம், அண்ணியாரும் நல்ல திரைப்பட ரசனை உள்ளவர் என்பதும், அண்ணனின் படைப்புகளை மிகவும் ரசிப்பவர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications