Vijayakanth Birthday: உருகிய தேவயானி! சரத்குமார் போட்ட போஸ்ட், அன்பை காட்டிய பிரபலங்கள்.. நெகிழ்ச்சி தருணம்
சென்னை: மறைந்த நடிகர், அரசியல் பிரமுகர் மற்றும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள், ஆகஸ்ட் 25 அன்று தமிழகம் முழுவதும் ரசிகர்களாலும், திரையுலகப் பிரபலங்களாலும், அரசியல் தலைவர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவரைப் பற்றிய நினைவுகளையும், அவர் ஆற்றிய சேவைகளையும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து நெகிழ்ந்தனர்.

விஜயகாந்தின் வாழ்க்கைப்பயணம்
விஜயகாந்த், ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். 1979-ல் வெளியான 'இனிக்கும் இளமை' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடக்கத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தாலும், பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 'கேப்டன் பிரபாகரன்', 'சின்னக்கவுண்டர்', 'ஊமைவிழிகள்' போன்ற அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
அரசியல் பிரவேசம்:
2005-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அரசியலில் அடியெடுத்து வைத்தார். தனது நேர்மையான பேச்சு, எளிமையான அணுகுமுறை மற்றும் உதவும் குணத்தால், அவர் குறுகிய காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். 2011 தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
இறுதி காலம்
நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது மறைவு, தமிழக மக்களையும், சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பிறந்தநாள் வாழ்த்துக்களும் நினைவுகளும்
இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சரத்குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில், விஜயகாந்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து, உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், "சினிமா அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமா துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவு கூறுகிறேன். அன்றாடம் நீங்காத நினைவுகளில் நிறைந்திருக்கும் அன்பு சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவர்தம் பிறந்தநாளில் நினைவு கூர்ந்து மகிழ்வோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
புகழ் அஞ்சலி
விஜய் டிவி பிரபலம் புகழ், விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு அவரது நினைவிடத்திற்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த வீடியோவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து, " ஏழைகள் வாழ நீ செய்த தியாகம்.." என்ற விஜயகாந்தின் பாடலை மேற்கோள் காட்டி நெகிழ்ந்தார். அதுபோல நடிகர் விஷால் விஜய்காந்தின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார் விஜயகாந்த் பற்றி உணர்வு பூர்வமான ஒரு பதிவையும் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சரிகமபவில் விஜயகாந்த் பிறந்தநாள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜயகாந்தின் பிறந்தநாள் சிறப்புச் சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் விஜயகாந்தின் பிரபலமான பாடல்களைப் பாடினார்கள். நடிகை தேவயானியின் மகள் இனியா, விஜயகாந்தின் வெற்றிப் பாடலான 'ஆடியில சேதி சொல்லி' பாடலைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.
தேவயானியின் உருக்கம்:
மகளின் பாடல் முடிந்ததும் பேசிய தேவயானி, "இந்த அற்புதமான தருணத்தில் என்னுடைய மகள் விஜயகாந்த் சாரின் பாடலை பாடியது எனக்கு ரொம்பவும் சந்தோஷம். இந்த சம்பவம் கூட விஜயகாந்த் சாரீரின் ஆசீர்வாதத்தால் தான் நடந்தது என்று நான் சொல்வேன். நான் விஜயகாந்த் சாருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்பவும் தங்கமான மனிதர். அவருடன் இருப்பது அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும். செட்டில் இருப்பவர்கள் எல்லாரையும் நன்றாக கவனித்துக் கொள்வார். அவருடன் நடிக்கும்போது, இப்படி அவருடைய பாடலை என்னுடைய மகள் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடுவார் என்று நான் நினைக்கவில்லை" என்று உருக்கமாகப் பேசினார்.
விஜயகாந்தின் நினைவு, அவரது பிறந்தநாளன்று, திரையுலகிலும், ரசிகர்களின் மனதிலும் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பதை இந்த நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை உணர்த்தின.












Click it and Unblock the Notifications