கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ்.. ஹவுஸ் ஃபுல்லான தியேட்டர்! விஜயகாந்தை வைத்து கொடுத்த உருக்கமான செய்தி!
சென்னை: நடிகர் விஜயகாந்தின் 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் முதல் வெளியீட்டில் பெற்றது போலவே ரீ-ரிலீசிலும் மகத்தான வெற்றியைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பிரபாகரன் உருவான விதம்
விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இந்தப் படத்தை திரைப்படக் கல்லூரி மாணவரான ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த 'புலன் விசாரணை' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
கதை - திரைக்கதை
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் போல வில்லன் கதாபாத்திரத்தை சித்தரித்து இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.கே.செல்வமணி எழுதியிருந்தார். விஜயகாந்தின் நண்பர் சரத்குமார் வீரப்பனைப் பிடிக்கச் சென்று கொல்லப்பட, அவருக்கு என்னவானது என கண்டுபிடிக்க விஜயகாந்த் களமிறங்குவதுதான் படத்தின் கதை.
பிரபல நட்சத்திரங்கள்
இந்தப் படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபினி, லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மன்சூர் அலிகானுக்கு வில்லனாக இது முதல் படம். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்தான் இடம் பெற்றிருந்தன. ஆனாலும் பின்னணி இசையில் அவர் அசத்தியிருந்தார். குறிப்பாக 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.
வசனங்கள் - சிறப்பு
இப்படத்தின் வசனங்களை லியாகத் அலிகான் எழுதியிருந்தார். விஜயகாந்த் பேசும் ஒவ்வொரு வசனமும் அனல் பறந்தது. நீதிமன்றத்தில் அவர் பேசும் காட்சி மற்றும் அரசியல் கலந்த வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் தற்போது கூலி படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த படத்தையும் மீறி கேப்டன் பிரபாகரன் ரிலீஸ் செய்வதற்கு 400 தியேட்டர் கிடைத்திருப்பதாக படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி சொல்லியிருந்தார்.
ரீ-ரிலீஸ் - ரசிகர்களின் உணர்ச்சிபூர்வமான அனுபவம்
வெற்றிகரமாக இந்த படம் இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. படம் தொடங்கும் முன் விஜயகாந்தின் உருக்கமான புகைப்படம் ஒன்று திரையில் தோன்றியது. அதில், "நான் மறைந்தாலும் உங்கள் நினைவுகளில் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. இது எனது நூறாவது படம். இந்தப் பெருமை எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, "தாயில்லாத எனக்கு தாயாக இருந்து திரையுலகில் நிலைக்க வைத்த தமிழகத்து தாய்மார்களுக்கும், அண்ணனாக ஏற்றுக்கொண்டு ஆதரித்த அன்பு சகோதரிகளுக்கும், என்னை உயிராக நினைக்கும் எனது உயிரான மன்றத்து சகோதரர்களுக்கும் அன்பு ரசிகர்களுக்கும், என்னை இயக்கிய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், என்னைத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி! அன்புடன் விஜயகாந்த்" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முதல் காட்சி ஹவுஸ்புல்
சென்னை கமலா தியேட்டரில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சி ஹவுஸ்புல்லாகி ரசிகர்கள் விஜயகாந்தை முதல் முறை பார்ப்பது போலவே ஆர்ப்பரித்து விசில் அடித்து உற்சாகப்படுத்தியுள்ளனர். இந்த ரீ-ரிலீஸ் மூலம் இப்போதுள்ள இளைஞர்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவது தெரிகிறது. திரையரங்குகளில் விஜயகாந்தின் இன்ட்ரோ காட்சிகளும் அவரது உருக்கமான வார்த்தைகளும் பல ரசிகர்களின் கண்களைக் கலங்க வைத்தன. விஜயகாந்தின் மகத்தான வெற்றிக்கு இந்த திரைப்படம் ஒரு சான்றாக இருந்தது என்பதை இந்த ரீ-ரிலீஸும் நிரூபித்துள்ளது.












Click it and Unblock the Notifications