50000 பாடல்கள் பாடிய இசைக்குயில் எஸ்.ஜானகி வீட்டில் மட்டும் ஏன் பாடவே இல்லை.. உண்மையை உடைத்த மருமகள்
சென்னை: "ஜானகி அம்மாவுடன் நான் எப்போதும் தோழியாகவே பழகினேன். ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் போல நாங்கள் பழகவில்லை. நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகவே இருந்தோம். கடந்த மே மாதம் அம்மாவுடன்தான் நான் தங்கியிருந்தேன். அந்த வயதிலும்கூட, அவரது ஞாபக சக்தியை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன்" என்று மறைந்த பாடகி ஜானகியின் மருமகள் உமா தனது குடும்ப அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மறைந்த பாடகி ஜானகியின் மருமகள் உமா, பிரபல சேனல்களுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், "ஒரே வீட்டில் நாங்கள் இருந்தாலும், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஆரம்பத்தில் அவ்வளவு பிசியாக இருந்தார். அதிகாலையில் எழுந்து ரெக்கார்டிங் சென்றுவிடுவார். இரவு நேரம் கழித்துத்தான் வீட்டிற்கு வருவார்கள். குடும்பத்தில் அவர் ஒரு செலிபிரிட்டி போல இருந்ததே இல்லை.

வீட்டில் அம்மா ஒருபோதும் பாடல்களை பிராக்டிஸ் செய்ததில்லை. ஸ்டுடியோவுக்குச் செல்லும் வரை எந்தப் பாடலை பாடப் போகிறார் என்பதுகூட அவருக்குத் தெரியாது. ஸ்டுடியோவுக்கு போன பிறகுதான் பாடலை பார்ப்பார். வீட்டை இசை பயிற்சிக்கான இடமாக இல்லாமல், குடும்பத்திற்கான அமைதியான இடமாகவே ஜானகி அம்மா வைத்திருந்தார்.
தூக்கம் உன் கண்களை
"தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... அப்படியொரு தூக்கத்திற்கு இன்று அம்மா போய்விட்டார். எந்தப் பாடகி, பாடகர்கள் நன்றாகப் பாடினாலும் உடனே பாராட்டுவார். அம்மாவுக்கு யார் மீதும் எந்தவிதமான போட்டியோ, பொறாமையோ இருந்ததே கிடையாது. புதிய பாடகர்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு அவ்வளவு ஊக்கமளிப்பார்கள்.
பிஸியாகவே இருந்தார்
இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இது எனக்குத் தனிப்பட்ட முறையில் அம்மா சொன்ன விஷயம். பல ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக அரசு பாடகர்களுக்கு விருது வழங்கியதில்லை. அப்போது அம்மா, "நான் பாட மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
அதன்பிறகுதான் பாடகர்களுக்கும் விருது வழங்க தொடங்கினார்கள். அதன்பிறகே அம்மா கர்நாடகாவிலும், மற்ற எல்லா மாநிலங்களிலும் பல விருதுகளைப் பெற்றார். அம்மா மைசூரில் மறைந்தபோது கர்நாடக அரசு முழு அரசு மரியாதை அளித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்காக எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரசிகர்கள்தான் அனைத்தும்
"ரசிகர்கள் இல்லை என்றால் கலைஞர்கள் கிடையாது" என்று அம்மா எப்போதும் சொல்வார். அதனால் அவர் எப்போதும் ரசிகர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். ரசிகர்களைத் தனது சொந்தக் குடும்பத்தினராகவே கருதுவார்.
பணிவு என்பதை அம்மாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பிரபலங்களாக இருந்தாலும் சரி, சாதாரண ரசிகர்களாக இருந்தாலும் சரி, அம்மாவிடம் பேசும் அந்த நொடியில் "ஜானகி அம்மா என்னுடையவர்தான்" என்ற உணர்வுடன் செல்வார்கள்.
எஸ்.ஜானகி அம்மா நினைவுகள்
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் பாடிய அம்மா, ஒவ்வொரு மொழியையும் தனது சொந்த மொழியாகவே கருதி பாடினார். அதனால்தான் எல்லா மாநில மக்களும் ஜானகி அம்மாவை தங்களது குடும்ப உறுப்பினராகவே நினைத்தார்கள். இது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இசை உலகிற்கே ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.
"வீட்டில் மாமியார், மருமகள் போல நாங்கள் பழகவில்லை. நாங்கள் எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். கடந்த மே மாதம் அம்மாவுடன்தான் நான் தங்கியிருந்தேன். அந்த வயதிலும் அதீத ஞாபக சக்தி அவருக்கு இருப்பதை பார்த்து வியந்து போனேன்" என்று உமா கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார்.














Click it and Unblock the Notifications