காந்தி தேசம்.. காந்தி மதம்... மகாத்மா காந்தியடிகள் படுகொலை தொடர்பாக தந்தை பெரியார்!
சென்னை: தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பிராமணர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் தமிழகம் அப்போது அமைதி காத்தது. அதற்கு தந்தை பெரியார் விடுத்த வேண்டுகோள் மிக முக்கிய காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். காந்தியடிகளுடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தாலும் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட போது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என பெயரிடலாம்; காந்தி ஆண்டு தொடங்கலாம்; காந்தியின் பெயரால் மதமே தொடங்கலாம் எனவும் எழுதியவர் தந்தை பெரியார்.
காந்தியடிகள் படுகொலை தொடர்பாக தந்தை பெரியார் எழுதிய அறிக்கைகள்: (ஏடுகள்: குடியரசு, விடுதலை)

காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியா வும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத் துக்குத் தூண்டு கோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ-உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலிஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப் படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப் பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும். குடிஅரசு, 31-1-1948
பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்களனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழி காட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது. அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினையேற்றுவிட்டன. காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பல திறப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். இக்கொலை யாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.
வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர். குடிஅரசு 7-2-1948.
மத இயலில், மதத்துக்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் வற்புறுத்தியவர், கடவுள் இயலில், கடவுள் ஒன்றுதான் என்றும் அந்த ஒன்றைத்தான் பலரும் பலவாறு கூறிப் போனார்கள் என்றும், ஆனால் எல்லா வற்றையும் ஒன்றாகவேதான் நான் மதிக்கிறேன் என்றும் விளக்கிக் கூறி, கடவுள் வழிபாட்டிற்காக அமைந்த கோவில் களை 'விபசார விடுதிகள்' என்று கூறி, அங்குத் தரகனோ, அந்தக் கடவுளுக்குப் பால், பழம், சோறோ வேண்டியதில்லை; திறந்த வெளியே போதும் என்றவர். அதாவது, விக்கிரக ஆராதனை கூடாது, பிரார்த்தனையே போதும் என்று வற்புறுத் தியவர். சமுதாய இயலில், ஒருவரை ஒருவர் சுரண்டுதல் கூடாது; பரம்பரையாக ஒருவர் உறிஞ்சிப் பிழைக்கவும், அதற்காக மற்றொருவர் நைந்து வாழ்க்கை கசந்து வாழவும், அதற்காக ஒரு கூட்டம் ஒடுக்கப்பட்டவர்களாய்-தாழ்த்தப்பட்ட வர்களாய் இருந்து வருவது ஈனம் என்றும், இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே நாட்டினர் என்றும் வற்புறுத்தியவர்.
அவர் மறைந்த பதினாறாம் நாளில், அவருடைய சாம்பல்களை எல்லாம் இந்த நாட்டின் புண்ணிய நதிகளில் கரைத்து விடப்பட்ட ஒரு சடங்கையும், அதைப் பக்தி விசுவாசமாகப் பலர் தரிசித்துச் சென்றனர் என்ற விளம்பரச் செய்திகளையும், அதை ஆங்காங்கே உள்ளவர்கள் அவை கொண்டு போகப்பட்டபோதும், கரைத்த போதும் ஏராளமாகக் கண்டு வணங்கிச் சென்றனர் என்ற செய்திகளைப் பார்க்கும்போதும் பெரிதும் வருத்தமடை கின்றோம். காந்தியாரின் படுகொலை விளைவித்த வருத்தத்தைக் காட்டிலும், அவருடைய முடிவு இந்தப்படி சித்திரவதை செய்யப்படுவது-நமக்கு மட்டுமல்ல, பகுத்தறிவுடைய எவருக் கும் அதிக வருத்தத்தையே உண்டுபண்ணும் எனலாம். குடிஅரசு 14.2.1948.
காந்தியாரின் ஞாபகார்த்தமாக இந்தியா தேசத்திற்கு காந்தி தேசம்' என்று பெயரிடலாம் என்றும்; கிறிஸ்து ஆண்டு, முகம்மது ஆண்டு என்பதுபோல் 'காந்தி ஆண்டு' துவக்கலாம் என்றும் கிறிஸ்து மதத்தைப்போல், பவுத்த மதத்தைப்போல், 'காந்தி மதம் ' என்ற ஒரு புது மதத்தைத் தோற்றுவிக்கலாம் என்றும் நான் யோசனை கூறியிருக்கிறேன்.
நமக்குத் தெரியாத கலியுக ஆண்டு, பசலி ஆண்டு, கிறிஸ்து ஆண்டு விவரம், தெளிவு கண்டுபிடிக்க முடியாத பிரபவ ஆண்டு முதலியவைகளை ஒப்புக் கொண்டு இருப்பதைவிட, நமக்குத் தெரிந்த ஒரு பெரியாரின் பேரால்-அதுவும் ஆயிரம் ஆண்டுகளாக இல்லாத ஒரு பெருமாறுதல் ஏற்பட ஆண்டு துவக்குவது எப்படித் தவறாகக் கருத முடியும்?
இந்த நாட்டுக்கு என்று ஒரு ஆண்டு வேண்டாமா? அது அவர்பேரில் இருக்கட்டும். காந்தியாரின் கொள்கைகளை வைத்து ஒரு மதத்தைத் தோற்றுவிப்பதுதான் எப்படித் தவறாகும்! சத்தியமும், அகிம்சையும்தானே அவருடைய முக்கிய தத்துவங்கள்! சத்தியமே கடவுள் என்பதுதானே அவருடைய முக்கிய சித்தாந்தம்.
தனியாக, வஸ்துவாக ஆளாக ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று பலதடவை சொல்லி இருக்கிறார். சத்தியம்தான் கடவுள் என்று அவர் கொண்டு நடத்திருக்கிறபடியால் மக்கள் சத்தியமே கடவுள் என்று நம்பிப் பயப்பட்டு நடந்தால் இன்றையக் கடவுள்களால் ஏற்படும் பயனைவிட-எவ்வளவோ நலம் ஏற்படும். பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்.
அகிம்சையையும், அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தையே கொண்டதான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா? அதன் மூலம் இன்று மக்களிடையே இருந்துவரும் சாதி வேறுபாடுகளும், மதவெறி உணர்ச்சியும் அடியோடு அழிய மார்க்கம் பிறக்காதா? அதன் மூலம் இன்று வரைக்கும் சாதிமத பேதங்களை உண்டாக்கவும், மக்களைக் காட்டுமிராண்டி காலத்திற்கு அழைத்துச் செல்லவுமே பெரிதும் பயன்பட்டு வந்த இந்துமதம், போலிக் கடவுள் அழிய வழி பிறக்காதா?
மதம் என்பதென்ன-மாற்றியமைக்கக் கூடாததொன்றா? மதம் என்பதே மக்களின் நல்வாழ்வுக்காகப் பெரியோர்களால் ஏற்படுத்தப்படும் நெறி அல்லது மார்க்கம் தானே! என்றாவது மொட்டையடித்துக் கொள்வதும் சாம்பல் பூசிக் கொள்வதும் மதம் என்றாகி விடுமா? ஆகவே, என்ன காரணம் முன்னிட்டேனும், இன்றையக் கடவுள் தன்மையும், மதத் தன்மையும் மாற்றப்பட்டாக வேண்டும். இன்றைய ஏற்பாடுகள் இன்றைய ஆர்டர்' எப்படியும் மாற்றப்பட்டாக வேண்டும். மாற்றப்படாத வரையிலும் இன்றைய மக்கள் வாழ்வு பாழாகத்தான் (Waste) போய்க்கொண்டிருக்கும். (விடுதலை 11.3-1948)












Click it and Unblock the Notifications