நஸ்ரினுக்கும் நூராவுக்கும் முளைத்த காதல்.. நீண்ட போராட்டத்திற்கு பின் திருமணம் செய்த லெஸ்பியன்கள்
திருவனந்தபுரம்: நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு லெஸ்பியன் ஜோடியான ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா. இருவரின் பெற்றோரும் சவுதியில் வேலை பார்த்து வருகிறார்கள்.
ஆதிலா சவுதி அரேபியாவில் பிளஸ் 1 படிக்கும் போது நூராவை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகிய நிலையில் திடீரென இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தனியாக தங்கியிருந்த நிலையில் இவர்களுக்குள் லெஸ்பியன் உறவு ஏற்பட்டது.

லெஸ்பியன் உறவு
இந்த நிலையில் இருவரது லெஸ்பியன் உறவு குறித்து இவர்கள் இருவரின் செல்போன் சாட் மூலம் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர் இதெல்லாம் தவறு என இருவருக்கும் அறிவுறுத்தினர். அதையும் தாண்டி பல்வேறு மிரட்டல்களின்போது இருவரும் பிரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

பெற்றோர்
அவர்கள் இருவரும் சந்திக்க வழியே இல்லாத அளவுக்கு பெற்றோர் செய்துவிட்டனர். ஆதிலாவை இரு பாலர் படிக்கும் கல்லூரியில் படிக்க வைத்தால் அவர் நூராவை மறப்பார் என கருதிய ஆதிலாவின் தந்தை அதன் போல் அவரை கேரளாவில் இருபாலர் கல்லூரியில் சேர்த்தார். அது போல் நூராவை யாருக்காவது திருமணம் செய்து வைத்தால், அவர் மாறிவிடுவார் என அவரது தந்தையும் நம்பினார்.

பட்டப்படிப்பு
இந்த நிலையில் இருவரும் பட்டப்படிப்பு முடித்தனர். ஆதிலா நூராவை பார்க்க கோழிக்கோட்டிற்கு வந்தார். அங்கு இருவரும் தனியாக தங்கியிருந்தனர். இது நூராவின் குடும்பத்தினருக்கு தெரியவர விஷயம் போலீஸ் வரை சென்றது. இதையடுத்து ஆலுவாவில் உள்ள வீட்டிற்கு ஆதிலா அழைத்து செல்லப்பட்டார். அது போல் நூராவையும் அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

உயர்நீதிமன்றத்தில் மனு
இதை ஆதிலா தடுத்த போது அவர் காயமடைந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு ஆதிலா அனுப்பப்பட்டார். இதுகுறித்து புகார் பதிவு செய்தும் ஆதிலாவுக்கு சாதகமாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூராவை அவரது பெற்றோர் கடத்தி வேறு இடத்தில் வைத்திருந்தனர். ஆனால் ஆதிலாதான் நூராவை கடத்தியதாக பழி சுமத்தினர். இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி ஆதிலா ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நூராவுக்கும் நஸ்ரினுக்கும் திருமணம்
இருவரும் லெஸ்பியனாக வாழ நீதிமன்றமும் அனுமதி கொடுத்துவிட்டது. மேலும் அவர்களுக்கு உறவினர்கள் இடையூறு ஏதும் செய்ய கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. தற்போது பல ஆண்டு கால காதல் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக நூராவும் ஆதிலாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதை பாத்திமா நூரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications