ஏர்டெல் ரீசார்ஜ் முடிந்தாலும் 3 நாட்களுக்கு “இலவசம்”.. வயநாடு நிலச்சரிவு காரணமாக ஸ்பெஷல் அறிவிப்பு!
வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், ஏர்டெல் அவசர நிவாரண சலுகை அளித்துள்ளது. இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக டேட்டா, கால்ஸ் சலுகைகளை வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது நாளாக நேற்று போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. நேற்று இரவு நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது வரை 282 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முண்டக்கை பகுதி மிகப்பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்பகுதியில் வீடுகள் இருந்த தடயமே இல்லாமல் மண்மூடி காணப்படுகிறது. அனைத்து இடங்களும் சேற்று மண், மரங்கள், பாறைகளால் மூடப்பட்டுள்ளன. புதையுண்ட பலரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதுவரை 200க்கும் மேற்பட்டோர் புதையுண்ட பகுதிகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கொடுமையான பேரழிவு வயநாட்டை புரட்டிப் போட்டுள்ளது. உறக்கத்தில் இருக்கும்போதே திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பலர் என்ன ஏதென்று அறியும் முன்னரே பேரிடரால் விழுங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீளாத் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, அவசர நேரத்தில் கைகொடுக்கும் பொருட்டு, இலவச டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குகிறது.
ப்ரீபெய்டு மட்டுமல்ல, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஏர்டெல் மொபைல் சேவை அணுகலை நீட்டித்துள்ளது. ஆனால், இந்த சலுகைகள் கேரளாவில் உள்ள வயநாடு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
வயநாடு பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிவாரண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், ரீசார்ஜ் முடிந்துவிட்டால், 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவைகளை வழங்குகிறது ஏர்டெல்.
வாடிக்கையாளர்கள் தினசரி 1 ஜிபி மொபைல் டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறலாம். பேரிடர் நேரத்தில் மக்களுக்கு அவசர தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவியாக இந்த நிவாரண சலுகையை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.
மேலும், ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, வயநாடு வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்தும் காலக்கெடு கூடுதலாக 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாவிட்டாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு சேவைகளை பயன்படுத்தலாம். 2 மாதங்களுக்கான கட்டணத்தையும் அடுத்த மாதம் செலுத்தினால் போதும்.
தொலைத்தொடர்பு ஆதரவு தாண்டி, ஏர்டெல் உள்ளூர் நிவாரண முயற்சிகளில் தீவிரமாக பங்களித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனம் கேரளா முழுவதும் உள்ள தனது 52 சில்லறை விற்பனைக் கடைகளையும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது. இங்கு அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.












Click it and Unblock the Notifications