அரசியலில் குதிக்கிறாரா இஸ்ரோ தலைவர் சோம்நாத்? சசிதரூருக்கு செக் வைக்க பாஜக போடும் பக்கா பிளான்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை வேட்பாளராக களமிறக்க பாஜக பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சசி தரூரை வீழ்த்த சோம்நாத் தான் சரியான சாய்ஸாக இருக்கும் எனக் கட்சி மேலிடம் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. மத்தியில் கடந்த 2014, 2019 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற பாஜக வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வியூகம் வகுத்து வருகிறது. மறுபுறம் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கொளோடு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை துவங்கின. ஆனால், இந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தனியே போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். நிதிஷ் குமாரும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் மீண்டும் இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது.
பாஜக வியூகம்: இப்படி அரசியல் களம் ஒருபக்கம் கொதித்துக் கொண்டு இருக்க பாஜகவும் தொகுதி வாரியாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்த பரிசீலனையையும் தொடங்கியுள்ளது. பாஜக வலுவாத இல்லாத தென் மாநிலங்களிலும் இந்த முறை கணிசமான வெற்றியை பெற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை வீழ்த்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை பாஜக களம் இறக்கலாம் என்ற பேச்சு அடிபட தொடங்கியுள்ளது.
சோம்நாத் சம்மதம்?: இந்த தொகுதிகள் உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இதன்படி திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் பொறுத்தவரை வெற்றிகரமான விண்வெளி திட்டங்களால் இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படுபவராக உள்ளார்.
கேரள மநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சோம்நாத்தை சொந்த தொகுதியில் நிறுத்தினால் அங்கு சசி தரூரை வீழ்த்தி விடலாம் என்று பாஜக நம்புவதாக தெரிகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகே விழாவின் போது அயோத்திக்கு சென்று இருந்த சோம்நாத்திடம் பாஜக மேலிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்க சோம்நாத்தும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே: முன்னதாக நிர்மலா சீதாராமன் அல்லது ஜெய்சங்கர் ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என பாஜக திட்டமிட்டதாகவும் தற்போது தனது முடிவை மாற்றி சோம்நாத் தான் பொருத்தமான வேட்பாளராக இருப்பார் என கட்சி மேலிடம் நம்பியதால் அவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் எம்.பியாக உள்ளார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார். இதனால், சோம்நாத்தை வேட்பாளராக நிறுத்தினால் சசிதரூருக்கு கடும் சவாலாக இந்த தேர்தல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்ரோ தலைவராக சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை உள்ளது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications