தொடங்கியது உலகளாவிய பிராமண சங்கமம்.. பிராமணர்கள் ஐஏஎஸ் மாதிரி பதவிக்கு அதிகம் வரனுமாம்- கேரள தலைவர்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று வரும் பிராமண சங்கமம் நிகழ்ச்சியில் பிராமண சமுதாய இளைஞர்கள் மென்பொருள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கேரள பிராமண சபை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ராமநாதபுரம் அருகே கேரள பிராமண சபை சார்பில் உலகளாவிய பிராமண சங்கமம் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி கல்பாத்தி வேத பாடசாலை மாணவர்களின் வேத பாராயணத்துடன் தொடங்கி உள்ளது.

இதனை அடுத்து கேரள பிராமண சபை துணைத் தலைவர் சுப்ரமணியன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கேரள பிராமண சபையின் தலைவர் கரிம்புழை ராமன் பேசுகையில், "பிராமண சமுதாய இளம் தலைமுறையினர் ஐ.டி பணிகளில் மட்டும் திருப்தி அடைந்து விடாமல், ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் துறைகளை தேர்வு செய்ய வேண்டும்.
கேரளாவில் நடைபெறும் தேர்தல்களில் நாம் மட்டும் ஒற்றுமையாக இருந்தால் 60 தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணக்கக் கூடியவர்களாக இருக்க முடியும். நாம் அனைவரும் அனைத்து கட்சியினரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறைகளையே கடைபிடிக்க வேண்டும்." என்று அறிவுரைகளை வழங்கினார்.
அவரை தொடர்ந்து பிராமண சங்கமம் நிகழ்ச்சியை சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகி கவுரி சங்கர் குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஜவுளிக் கடையான 'கல்யாண் சில்க்ஸ்' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பட்டாபிராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது, "தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் இந்தியாவுக்கே பெயர் வாங்கித் தருகிறது. அதே போல், கேரளாவிலும் நாம் ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்கிட வேண்டும். அதற்கு உதவி செய்பவர்களில் நானும் முன்னிலையில் இருப்பேன்." என்று கூறினார்.
அதை தொடர்ந்து தனியார் தமிழ் நாளிதழின் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் பிராமண சங்கமத்தை முன்னிட்டு கண்காட்சியை தொடக்கி வைத்தார். இந்த விழாவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், வங்கதேச பிராமண சம்சாத் ஆலோசகர் அமியா முகர்ஜி, தமிழ்நாடு பிராமண சமாஜம் தலைவர் ஹரிஹரமுத்து, கர்நாடகா பிராமண மகா சபை அமைப்புச் செயலர் ரவிக்குமார், கேரளா பிராமண சபை பொதுச்செயலர் சிவராமகிருஷ்ணன் தயோகக்ஷேம சபை தலைவர் அக்கீராமன் காளிதாச பட்டதிரிபாடு உள்ளிட்டோரும் உரையாற்றினார்கள்.
இந்த பிராமண சங்கமத்தில் நவீன காலத்தில் வேத அறிவின் முக்கியத்துவம் பற்றிய விவாதம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகள், உரைகள், விவாத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நாளை சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை மத்திய அமைச்சர் வி.கே.சிங் தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications