கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு.. 3 பேர் பலியான சோகம்.. சுற்றுலா போன சென்னை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் இரு வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி தோட்ட தொழிலாளர்கள் 2 பேர், சுற்றுலாவுக்காக கேரளா சென்ற சென்னை பெண் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவடா அருகே இருக்கும் கொட்டகாம்பூர் என்ற பகுதியில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த சிலர், கனமழை பெய்து கொண்டு இருந்ததால் மழையில் நனையாமல் இருக்க அங்கே இருந்த தகர கொட்டகை ஒன்றின் கீழ் ஒதுங்கி இருந்தனர்.
தோட்ட தொழிலாளர்கள் மூன்று பேரும் அதில் அமர்ந்து இருந்தனர். அப்போது மண் சரிவு ஏற்பட்டதில் அந்த தகர கொட்டகை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரும் உயிருக்கு போராடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டார்.

சென்னையை சேர்ந்தவர் பலி
நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. கொட்டகம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது51). அவரது சகோதரி சின்னு (45) ஆகியோர் இறந்தனர். மேலும் மாரியம்மா என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதேபோல கோட்டயம் அருகே டீக்காய் வேலத்துச்சேரியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுற்றுலாத்தலமான வாசகமணு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் மண் சரிந்து விழுந்ததில் சிக்கினர். இதில் ஒரு பெண் பலியானார். அவர் சென்னை ஜவகர் நகரைச் சேர்ந்த சங்கீதா அருள் லால் (35) என்று தெரியவந்தது.
அவருடன் வந்த தமிழகத்தைச் சேர்ந்த தோழி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரளாவில் வருகிற 24-ந் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தென்மேற்கு பருவமழை விலகத்தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில்தான், மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் மாயமாகியுள்ளனர்.
உலர்வட்டம் - டி.கே. காலனி பகுதியில் மாலை 5 மணியளவில் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சொக்காடு மற்றும் அமரம்பலம் ஊராட்சிகளை பிரிக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் 9 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 2 ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாயமானவர்களில் டி.கே. காலனியைச் சேர்ந்த சஜிதா என்ற பெண்ணும், வண்டூரைச் சேர்ந்த 3 இளைஞர்களும் இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
