100 பேரை மீட்ட வீரன்! 6 உயிரைக் காப்பாற்றும்போது நடந்த விபரீதம்!
சூரல்மலா: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து 100 பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒருவர், அடுத்து 6 பேரை வெள்ளத்திலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவரது உயிரைப் பறிகொடுத்துள்ளார். இந்த உருக்கமான செய்தி கேரள மக்கள் மனங்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
கடந்த ஜூலை 30 இரவு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், மேப்பாடி, சூரல்மலா, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 360 பேர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் நிலை குறித்து தெரியவில்லை. அடையாளம் காண முடியாத சுமார் 166 உடல் பாகங்களும் கிடைத்துள்ளன.

ஒட்டு மொத்தம் 4,833 மக்கள் இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் பேரிடர் குழு அதிநவீன ரேடார்கள், ஆளில்லா விமானங்கள், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தேடுதல் படலம் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வயநாடு பக்கம் உள்ள சூரல்மலாவில் கிட்டத்தட்ட 100 பேரை இந்த நிலச்சரிவிலிருந்து காப்பாற்றிய பிரஜீஷ் என்பவர் அதனைத் தொடர்ந்து 6 பேரை மீட்கும் முயற்சி ஈடுபட்ட போது தனது உயிரைப் பறிகொடுத்த சோக சம்பவம் கேரள மக்கள் மனங்களைச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வெறும் 36 வயதே நிரம்பிய பிரஜீஷ், சூரல்மலா, முண்டக்கை சுற்றுவட்டாரங்களில் இன்றைக்கு ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.
முண்டக்கை தேயிலைத் தோட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 100 பேரை அவர் காப்பாற்றியதாகவும், சூரல்மலா பள்ளி சாலையில் உள்ள நசீர் எரகடன் என்பவர் வீட்டில் சிக்கித் தவித்த மேலும் ஆறு பேரைக் காப்பாற்ற விரைந்தபோது உயிரைப் பறிகொடுக்க நேர்ந்ததாகவும் அப்பகுதியில் குடியிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். "அவர் தனது வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. எப்போதும் பிறரைப் பற்றியே யோசிப்பார்"என்கிறார் ஜித்து. இவர் அடுத்தடுத்த நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட வெள்ளரிமலைக்கு அடுத்துள்ள உட்டோபியா ரிசார்ட்ஸில் பிரஜீஷுடன் பணிபுரிந்து வந்தவர். இறந்து போன பிரஜீஷைப் பற்றி நன்கு அறிந்தவர்.
"பிரஜீஷ் ஒரு அசாதாரண தைரியசாலி. எந்த வெள்ளத்திலும் அவரால் நீந்த முடியும். எவ்வளவு இருட்டிலும் காட்டில் தனியாக நடந்து போய்விடுவார்" என்கிறார் அவரது நெருங்கிய நண்பரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியுமான பாலகிருஷ்ணன். பிரஜீஷ் உட்டோபியா ரிசார்ட்ஸில் சமையல்காரராக பணியாற்றி வந்துள்ளார். கூடவே அவர் நான்கு ஏக்கர் ஏலக்காய் பண்ணையைக் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வந்துள்ளார். அவர் வனத்துறையின் ஆர்ஆர்டி மீட்புப் பணிக் குழுவிலும் இருந்துள்ளார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்துள்ளது. அதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என உணர்ந்த பிரஜீஷ், அடுத்த நாள் திங்கள்கிழமை காலை தனது ரிசார்ட்டில் இருந்த ஆறு சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வேறு பகுதியில் தங்க வைத்துள்ளார். ஆனால், அந்த மீட்புப் பணி எளிமையாக இல்லை. பல இடங்களில் மரங்கள் விழுந்து சாலை மூடப்பட்டு இருந்தன. ஆகவே கூடவே டார்ச் லைட், மீட்புக் கயிறு ஆகிய உபகரணங்களை அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட இரவு, அவர் தனது சாலையில் உள்ள ஆறு வீடுகளிலிருந்து 90 பேரை மீட்டு மலை உச்சியிலிருந்த பாதுகாப்பான எஸ்டேட் பங்களாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். "இரவு 9 மணி முதல் 11 மணி வரை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆகவே அதன் ஆபத்தை உணர்ந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினோம். அதன் பிறகு நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்" என்கிறார் சூஜிபாராவில் வசிக்கும் அஜித். இவர் இறந்துபோன பிரஜீஷின் மற்றொரு நண்பன்.
"நாங்கள் வீட்டுக்குப் போன பிறகும் பிரஜீஷ் தனது மீட்புப் பணியை நிறுத்தவில்லை. அவர் ஜீப்பில் சுற்றிக் கொண்டே இருந்தார்"என்றார் பாலகிருஷ்ணன். ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் வெள்ளரிமலையில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டபோது பாலகிருஷ்ணனுக்கு பிரஜீஷிடமிருந்து போன் வந்துள்ளது. அப்போது அவர், "பாலா சில இளைஞர்களுடன் உடனே ஸ்கூல் ரோட்டு பக்கம் வா. இங்கே நிறைய வெள்ளம். நிறையப் பேர் மாட்டிக் கொண்டுள்ளனர். உடனே வாங்க, மீண்டும் தூங்க போய்விடாதீங்க"என்று பிரஜீஷ் சொன்னதாக மலையாள மனோரமா ஊடகத்தில் பேசியபோது பாலகிருஷ்ணன் நினைவுகூர்ந்துள்ளார்.
பாலகிருஷ்ணன் நேரத்தை வீணாக்கவில்லை. அவர் தனது அட்டமலா கிராமத்திலிருந்து 10 இளைஞர்களை அழைத்துக்கொண்டு, சூரல்மலாவில் உள்ள பள்ளிச் சாலைக்கு உடனே சென்றுள்ளார். பாலகிருஷ்ணன் குழு 13வது பாலத்திற்கு நள்ளிரவு 1.30 மணி வந்துள்ளனர். அப்போது ஒரு பெண் மரத்தடியில் குப்புறக் கிடப்பதைப் பார்த்துள்ளனர்.
"நாங்கள் அந்தப் பெண்ணை எங்கள் வேட்டியால் மூடி ஓடையின் ஓரத்தில் தூக்கி வைத்தோம்" என்கிறார் பாலகிருஷ்ணன். அடுத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு தோட்டத் தொழிலாளர்களின் உடல்களை இவரது குழு கண்டுள்ளது. "உடனே உடல்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றோம்"என்கிறார். இந்த நேரத்தில், பிரஜீஷ் பலமுறை பாலகிருஷ்ணனை அழைத்துள்ளார். அப்போது, மலைகளிலிருந்து வேரோடு சாய்ந்த மரங்கள் பள்ளி சாலையை அடைத்துவிட்டதாக பாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.
இரண்டு அடுக்கு மாடி வீட்டிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களை மீட்கக் கயிற்றுடன் வரும்படி நசீர் பி எரகடன் என்பவர் பிரஜீஷிடம் கூறினார். இவரது வீட்டின் தரைதளம் முழுக்க தண்ணீர் புகுந்துவிட்டது. ஆகவே, அவர் உதவியை நாடியுள்ளார். நசீரின் தந்தை பீரன்குட்டிக்கு 70 வயது. அவருக்குக் காது கேட்காது. பேசுவதும் நடப்பதும் கூட சிரமம். இவரது தாயார் நபீசாவுக்கு வயது60. மனைவி ரெஜினா, இவர்களது இரு மகன்கள் நியாஸ், அனஸ் ஆகியோர் வீட்டிலிருந்துள்ளனர்.
இதில் ஒரு மகனுக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மற்றொருவர் வயநாட்டில் உள்ள ட்ரீ வேலி ரிசார்ட்டில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். ஜூலை 29 அன்று அனஸின் பிறந்தநாள் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலிருந்துள்ளனர். பிரஜீஷ் இந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். மீட்பு கயிற்றைச் சுமந்து கொண்டு மலையில் ஏறிய பிரஜீஷ், பள்ளி சாலையைக் கடந்து செல்லும்போது மரங்கள் மிதந்து வந்துள்ளன. அந்த ஆபத்தை உணராமல் முன்னேறிச் செல்ல முயற்சி செய்துள்ளார் பிரஜீஷ்.
அதிகாலை 2 மணியளவில் மலைப்பகுதியில் பயங்கர நில வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே இரண்டாவது நிலச்சரிவு. பாலகிருஷ்ணன் பிரஜீஷை அங்கிருந்து வெளியேற அழைத்துள்ளார். "அவர் எனது அழைப்பை எடுத்தார். நசீர் இக்காவின் வீட்டின் பக்கம் ஏறக்குறைய வந்துவிட்டதாகச் சொன்னார்" என்றார் பாலகிருஷ்ணன். அதுதான் பிரஜீஷ் குரலை அவர் கடைசியாகக் கேட்டது. அதன்பின்னர் அந்தப் பேராபத்தில் பிரஜீஷ் சிக்கியுள்ளார்.
"நிலச்சரிவின் போது ஒன்றோடு ஒன்று பாறைகள் மோதிக் கொண்டதால் தீப்பொறிகள் உண்டாகின. சத்தமும் கடுமையாக இருந்தது"என்கிறார் பாலகிருஷ்ணன். ஆபத்தை உணர்ந்த இந்த 10 பேரும் அருகிலிருந்த உயரமான மலை நோக்கி ஓடி இருக்கிறார்கள். சிறிது நேரத்தில் முண்டக்கை, சூரல்மலா கிராமம் பாறாங்கற்களால் தரைமட்டமாக மூடப்பட்டது. நசீரும் அவரது குடும்பத்தினரையும் அதன் பின் காணவில்லை. பிரஜீஷின் எங்கே போனார்? என்ன ஆனார் என்பது எதுவும் தெரியவில்லை. அதற்கானத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால்,சரியான நேரத்தில் பிரஜீஷ் மேற்கொண்ட நடவடிக்கையால் அவரது தாய் ரமணி, மூத்த சகோதரர் பிரவி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்படப் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இதில் மற்றொரு சோகம் என்னவென்றால் மீட்பு பணியில் பிரஜீஷுடன் இணைந்து வேலை பார்த்த பாலகிருஷ்ணன் தனது பாட்டி தங்கம்மா, தந்தைவழி மாமன்களான முருகன், ராஜன் மற்றும் அவர்களது மனைவிகளை இவர் இழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications