இந்தியாவின் மிகப்பெரிய திருட்டு.. தெற்கு முதல் வடக்கு வரை பெரும் பாதிப்பு - பைபர்ஜாய் செய்த சம்பவம்
திருவனந்தபுரம்: கடந்த வாரம் குஜராத், ராஜஸ்தானில் கரையை கடந்த பைபர்ஜாய் புயல் காரணமாக தென் இந்தியா முதல் வட இந்தியா வரை பாதிப்பை ஏற்படுத்தப்போகும் பெரும் திருட்டு ஒன்று நடந்து இருக்கிறது. அப்படி என்ன திருட்டு. விரிவாக பார்ப்போம்.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான பைபர்ஜாய் புயல் கடந்த 6 ஆம் தேதி மாலை உருவானது. கேரளாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலைகொண்டு இருந்த இந்த புயல் அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவை ஒட்டிய கடலோர பகுதிகளை கடந்து குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் நிலை கொண்டது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு குஜராத் மாநிலத்தின் கட்ச் - சௌராஷ்டிரா வளைகுடாவில் கரையை கடந்தது. இதன் காரணமாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களிலும், தெற்கு ராஜஸ்தானிலும், பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பெரு மழை கொட்டித் தீர்த்தது.
குஜராத்தில் கரையை கடந்த பைபர்ஜாய் புயல் அம்மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு தெற்கு ராஜஸ்தான் வழியாக நிலப்பகுதிக்குள் நுழைந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கத்தை 320 சதவீதம் அதிக மழை பொழிவு ஏற்பட்டு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதேபோல் குஜராத்தில் 166 சதவீதம் அதிக மழை பொழிவு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலப்பகுதிக்குள் புகுந்த பைபர்ஜாய் புயல் ராஜஸ்தானை தாண்டி மத்திய பிரதேசத்துக்கும் சென்றதால் அங்கும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த பெரும் புயல் பல மாநிலங்களில் பருவமழையையே தாமதப்படுத்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஜூன் 1 முதல் 80 சதவீதம் அளவுக்கு மழை பற்றாகுறை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் மழை பற்றாகுறை 71 சதவீதமாக உள்ளது. கர்நாடகாவில் பொழிய இருந்த தென்மேற்கு பருவமழை இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறது,

பருவமழை காற்றின் தன்மையை பைபர்ஜாய் புயல் பாதித்து விட்டதாக பெங்களூரு வானிலை மைய இயக்குநர் தெரிவித்து உள்ளார். பருவமழை பாதிக்கப்பட்டு உள்ளதுடன் வட மாநிலங்களில் வெப்ப அலையையும் இந்த புயல் உண்டாக்கி உள்ளது. கடந்த 19 ஆம் தேதி இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் வெப்ப அலை, தீவிர வெப்ப அலையாக வலுவடையும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இந்த வெப்ப அலை ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகள், தெலுங்கானா, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி, மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி, கிழக்கு உத்தரப்பிரதேசம், கங்கையை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் வெப்ப அலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பருவமழை காலங்களில் புயல்கள் அதிகம் ஏற்படுகின்றன. இதனால் பெய்ய வேண்டிய மழையும் பெய்யாமல் வெப்ப அலை ஏற்படுகிறது. கடந்த மே மாதம் வங்கக்கடலில் உருவான மோச்சா புயலால்தான் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெப்ப அலை நிலவியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications