'எம்புரான்': அப்போ தயாரிப்பாளருக்கு எதிராக ரெய்டு! இப்போ பிருத்விராஜுக்கு நோட்டீஸ்! என்ன பஞ்சாயத்து?
திருவனந்தபுரம்: எம்புரான் திரைப்படம் வெளியானதிலிருந்து வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தி வருகின்றன. இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இப்போது படத்தின் இயக்குநர் பிரித்விராஜுக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்னதான் பஞ்சாயத்து? ஏன் இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகள்? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது பற்றி இந்த செய்தி விவரிக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு கேரளாவில் வெளியான பல திரைப்படங்களில் 'Left Right Left' எனும் படம் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. அன்றைய காலத்தில் கேரள சிபிஎம் கட்சியின் மிகப்பெரிய தலைவராக பினராயி விஜயன் இருந்தார். திரைப்படம் இவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. கடுமையான விமர்சனங்கள் படத்தில் இருந்தன. ஏறத்தாழ ஒரு ரவுடியை போல பினராயி சித்தரிக்கப்பட்டிருந்தார். படத்தின் திரைக்கதையை எழுதியது முரளி கோபி.
இதே முரளி கோபியின் எழுத்தில் உருவானதுதான் எம்புரான் திரைப்படம். இந்த திரைப்படத்தை கேரளத்தின் முதலமைச்சராக இருக்கும் பினராயி விஜயன் தியேட்டருக்கு சென்று பார்த்து முரளி கோபி உட்பட திரைப்பட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 'Left Right Left' திரைப்படம் தியேட்டருக்கு வந்தபோது, படத்தை தடை செய்ய வேண்டும் என்று யாரும் போராட்டம் நடத்தவில்லை. முரளி கோபி மீது எவ்வித தாக்குதலும் நடக்கவில்லை. பினராயி விஜயன் முதலமைச்சராக ஆன பின்னர் முரளி கோபி வீட்டில் ரெய்டு நடத்தப்படவில்லை.
ஆனால் இன்று எம்புரான் திரைப்படம் ஏன் இவ்வளவு நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது? எம்புரான் தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுல் சிட் பன்ட்ஸ் நிறுவனத்தில் எதற்காக ரெய்டு நடத்தப்படுகிறது? திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக பிரமுகர்களில் ஒருவரான வி.வி.விஜேஷ் எதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்? இன்று படத்தின் இயக்குநரான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுத்ததன் மூலம் என்ன சொல்ல வந்திருக்கிறது? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எம்புரான் திரைப்படத்தின் தொடக்கத்தில் சில காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதுதான் இந்த திரைப்படம் இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்ள முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. மட்டுமல்லாது கலவரத்தில் சிறுபான்மையினர் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கும் விதமாகவும், மிக குறிப்பாக, பில்கிஸ் பானு வழக்கில் நடந்த விஷயத்தையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
மேலும் கேரளாவில் பஜ்ரங்தள், விஎச்பி, இந்து மகா சபை, ஏபிவிபி போன்ற வலதுசாரி அமைப்புகள் எப்படி வளர்ந்தன என்பதும் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆக இது எல்லாம்தான் படத்திற்கு எதிராக குரல்கள் எழ காரணம் என்று சொல்லப்படுகிறது. வலதுசாரிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக படத்தில் பல சீன்கள் கட் செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளால் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக மோகன்லால் கூறியிருந்தார்.
இவ்வளவு நடந்த பின்னரும் கூட அடுத்தடுத்த ரெய்டுகள் தொடர்கின்றன. இவையெல்லாம் பார்க்கும்பொது சுயமாக செயல்படும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறதோ? மத்திய பாஜக அரசின் தாய் அமைப்பாக இருக்கும் ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளுக்கு எதிராக குரல்கள் எழும்போது அதை நசுக்க இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறதோ? என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இந்த விகாரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே? ரெய்டு, வழக்கு இதெல்லாம் சரியா?












Click it and Unblock the Notifications