எப்படி இருந்த நடிகர்? இறந்த தகவலே வரலையே.. 50+ தமிழ் படங்களில் நடித்த கசான் கானுக்கு இந்த நிலையா?
திருவனந்தபுரம்: 90ஸ் கிட்ஸ்களை தன்னுடைய வில்லத்தனத்தால் அதிர வைத்த பிரபல மலையாள நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கிறார்.
90 களில் வெளியான ஏராளமான தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியவர் கசான் கான். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவருக்கு சினிமாவில் அறிமுகம் கொடுத்தது தமிழ்நாடுதான். கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழில் வெளியான செந்தமிழ்பாட்டு என்ற திரைப்படமே இவரது முதல் படமாகும்.
சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் என 90, 20ங்களின் தொடக்கத்தில் வெளியான ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். 50 க்கும் அதிகமான தமிழ் படங்களில் நடித்த இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று உள்ளார். குறிப்பாக விஜயகாந்த் படங்களில் பிரதான வில்லனாக கசான் கானை பார்த்து இருக்கலாம்.

தமிழ் திரையுலகில் இவர் நடித்த முதல் படத்திலேயே வரவேற்பு கிடைத்த காரணத்தால் மலையாள திரையுலகிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. 1993 ஆம் ஆண்டு வெளியான கந்தர்வம் என்ற மலையாள திரைப்பத்தின் மூலம் இவர் கேரளாவிலும் அறிமுகம் கொடுத்தார். மரியாதா ராமன், தி டான், மாயாமோகினி, ராஜாதிராஜா, வர்ணபகிட்டு, தி கிங், லைலா ஓ லைலா உள்ளிட்ட மலையாள படங்களில் இவர் நடித்து உள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் கசான் கான் நடிப்பில் வெளியான சிஐடி மூசா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அம்மாநில மக்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றார் கசான் கான். தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரையுலகங்களில் இவர் கடந்த 13 ஆண்டுகள் பயணித்து ஏராளமான படங்களில் நடித்து உள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியான லைலா ஓ லைலா என்ற மலையாள திரைப்படமே இவரது கடைசி படமாகும். அதன் பிறகு கடந்த 8 ஆண்டுகளாக இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. கசான் கான் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் என்எம்.பாதுஷா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
அது கசான் கான் மரணம் தொடர்பானது. கடந்த சில நாட்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதாகவும், அவரது மரணம் குறித்த தகவல் தற்போதுதான் கிடைத்ததாகவும் தெரிவித்து உள்ளார். ஒரு காலத்தில் தமிழ், மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் இறந்த செய்தி கூட இவ்வளவு தாமதமாக கிடைத்து இருப்பதாக வருந்துகின்றனர் திரையுலகினர்.












Click it and Unblock the Notifications