மேடையிலேயே சரிந்து விழுந்து பாடகர் பலி - ஜேசுதாஸால் பாடகர் ஆனவர்.. கடைசியாகவும் அவர் பாட்டு!
திருவனந்தபுரம் : பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர், மேடையில் பாடல் பாடிக் கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பிரபல பாடகரான பஷீர், வர்கலாவுக்கு அருகேயுள்ள எடவா எனும் ஊரைச் சேர்ந்தவர். ஜேசுதாஸ், ரஃபி பாடல்களைக் கேட்டு பயிற்சி பெற்று பாடத் தொடங்கியவர்.
மறைந்த பஷீர், கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். ஜேசுதாஸ் பாடலை மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே அவர் சரிந்து விழுந்து உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எடவா பஷீர்
பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). இவர் மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் நீண்ட காலமாக பாட்டுப் பாடி வந்த'ப்ளூ டைமண்ட்ஸ்' என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டை ஒட்டி ஆலப்புழாவில் உள்ள பத்திரப்பள்ளியில் நேற்று இரவு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேடையிலேயே சரிந்து
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடலான 'மனோ ஹெய் டும்' எடவா பஷீர் மேடையில் ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாடலை பாடி முடித்தவுடன் திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மாரடைப்பால் மரணம்
உடனடியாக பாடகர் எடவா பஷீரை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரசிகர்கள் இரங்கல்
இதையடுத்து எடவா பஷீரின் அவரது உடல் ஆலப்புழாவில் இருந்து அவருடைய சொந்த ஊரான கொல்லம் கடப்பக்கடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிரபல பாடகர் எடவா பஷீரின் மறைவுக்கு கேரள திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications