"கொடூரம்" ஐசியூ வார்டில் பெண் நோயாளி பலாத்காரம்..அதிர்ந்த கேரளா..விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவு
கேரளாவில் அறுவை சிகிச்சை செய்து அரை மயக்க நிலையில் இருந்த பெண்ணை மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் அறுவை சிகிச்சை செய்த பெண் அரை மயக்க நிலையில் இருந்த போது 55-வயதான மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தை அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நெஞ்சை உறையவைக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு: -
கேரளாவில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நிலை பாதிப்பால் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெண்ணின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர்.

அறுவை சிகிச்சை முடிந்ததும்
இதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தப் பெண் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மற்றொரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்கள் சென்றுள்ளனர். அப்போது ஆபரஷேன் தியேட்டரில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்த பெண் நோயாளியை ஐசியூ வார்டிற்கு மருத்துவமனை ஊழியரான சசீந்திரன் (வயது 55) என்பவர் கொண்டு சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்
அரை மயக்க நிலையில் இருந்த பெண் நோயாளியை கொடூர எண்ணம் கொண்ட சசீந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனக்கு நேரும் கொடூரத்தை அறிந்து இருந்தாலும் அதை தடுக்க முடியாத அளவில் அரை மயக்கத்தில் அந்தப் பெண் நோயாளி இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த தனது கணவரிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உடனடியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனை ஊழியர் கைது
உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். கேரளாவை அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி உரிய அறிக்கை அளிக்குமாறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இன்று பிற்பகலில் நோயாளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சசீந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும் அவரை இடை நீக்கம் செய்துள்ளது.

நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பாக..
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை வார்டில் வைத்து பெண் நோயாளியை மருத்துவமனை ஊழியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேராளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications