அட்ராசக்க.. மக்களே கேட்டுச்சா.. சொன்ன மாதிரி மைலேஜ் தராத கார்.. கம்பெனிக்கு ரூ.3.10 லட்சம் அபராதம்
திருவனந்தபுரம்: அதிக மைலேஜ் கொடுக்கும் என்று சொல்லி விற்கப்பட்ட கார் அதைவிட 40% குறைந்த மைலேஜ் கொடுத்திருந்த நிலையில், நுகர்வோர் குறைதீர் மன்றம் கார் நிறுவனத்திற்கு ரூ.3.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.
கடந்த 2014ல் காரை வாங்கிய உரிமையாளர் எப்படி ஓட்டி பார்த்தாலும் நிறுவனம் சொன்ன மைலேஜ் என்பது கிடைக்கவில்லை என்பதால் அவர் நுகர்வோர் மன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த மன்றம் கார் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதேபோல மீண்டும் இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறது.

குறைவான மைலேஜ்
கேரளாவின் திருச்சூரை சேர்ந்த சவுதாமினி பிபி என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தின் கிளாசிக் வகை டீசல் காரை கைரலி ஃபோர்டு பிரைவேட் லிமிடெட் எனும் ஷோ ரூமில் ரூ.8,94,876 கொடுத்து வாங்கியுள்ளார். வாங்குவதற்கு முன்னர் இந்த ஷோ ரூம் சார்பில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, 'கிளாசிக்' வகை கார்கள் லிட்டருக்கு 32 கிமீ வரை ஓடும் என்று துண்டு பிரசுரங்கள் மூலம் உறுதியளித்துள்ளன. இதனை நம்பி வாங்கியவருக்கு உறுதியளிக்கப்பட்ட மைலேஜை கார் கொடுக்கவில்லை. இதனால் கடுப்பான கார் ஓனர் ஷோ ரூமுக்கு சென்று விளக்கம் கேட்டார். அங்கிருந்த பணியாளர்கள் ஏதேதோ சொல்லி சமாதானம் செய்திருக்கிறார்கள்.

வழக்கு
இந்நிலையில், இதெல்லாம் சரிப்பட்டு வராது என ஓனர் திருச்சூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகினார். இதனையடுத்து திருச்சூரின் கைரலி ஃபோர்டு பிரைவேட் லிமிடெட், காரின் டீலர் மற்றும் உற்பத்தியாளரான ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் ஆஜரான ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வழக்கறிஞர், "ஆட்டோ கார் கிராஸ் கண்ட்ரி டிரைவ் எனும் மூன்றாம் தரப்பு ஏஜென்சி நடத்திய சோதனையின் அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதனை அடிப்படையாக கொண்டே நாங்கள் இந்த உறுதியை அளித்தோம்" என்று கூறினர். ஆனால் இந்த வாதங்களை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

ஆய்வு
நீங்கள் வழங்கிய துண்டு பிரசுரங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்றும் நீதிபதி உறுதியாக கூறினார். மேலும், காரின் உண்மையான மைலேஜை பரிசோதனை செய்ய பிஎச்டி பயின்ற அரசு பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் இணைப் பேராசிரியர் ஒருவரை நிபுணர் ஆணையராக நியமித்து உத்தரவிட்டார். இந்த பேராசிரியர் கிளாசிக் காரில் ஒரு லிட்டர் டீசலை மட்டும் நிரப்பிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் 55-60 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளார். அப்போது கார் வெறும் 19.6 கி.மீ மட்டுமே ஓடியுள்ளது. காரில் எவ்வித கூடுதல் சுமைகளும் இருக்கவில்லை. இதில் பயன்படுத்தப்பட்டது கிளாசிக் வகையின் புதிய கார். ஆய்வில் கிடைத்த தகவல்களை அவர் நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.

தீர்ப்பு
அறிக்கையை பார்த்து அதிர்ந்த நீதிபதி, கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கும் யதார்த்தத்திற்கும் இடையே சுமார் 40% வேறுபாடுகள் இருக்கிறது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வியெழுப்பினர். இதனை ஃபோர்டு இந்தியா நிறுவனம் எதிர்க்கவில்லை. மாறாக சில கருத்துக்களை முன்வைத்தது. அதாவது கார் சீரான வேகத்தில் இயங்கினால் அதன் மைலேஜ் கூடும் என்றும், நெரிசல் அற்ற பகுதியில் பயன்படுத்தும் போது கார் தனது முழு திறனையும் வெளிப்படுத்தும் என்றும் கூறியது. ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார். ஏனெனில் கார் தேசிய நெடுஞ்சாலையில்தான் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்றும், அங்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருப்பதால் சீரான வேகம் நிச்சயம் இருக்கும் என்றும் கூறினார். பின்னர் இவ்வாறு இனி தவறான வாக்குறுதிகள் கொடுக்கக்கூடாது எனவும், இந்த தவறுக்காக ரூ.1.50 லட்சமும், நுகர்வோருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக ரூ.1.50 லட்சமும் வழக்கு செலவுக்காக சிறு தொகை என மொத்தமாக ரூ.3.10 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications