திருவனந்தபுரத்தில் பிரிட்டன் போர் விமானம்! சும்மா நிறுத்த முடியாது.. கட்டணம் வாங்க திட்டம்
திருவனந்தபுரம்: கடந்த 13ம் தேதி எரிபொருள் இல்லை என்று சொல்லி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான F-35 போர் விமானம் தரையிறங்கி இருந்தது. 10 நாட்களுக்கு மேல் ஆகியும் விமானம் கிளம்பாமல் இருப்பதால், இதற்கான கட்டணத்தை வசூலிக்க விமான போக்குவரத்து துறை திட்டமிட்டிருக்கிறது.
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே தூதரக மற்றும் பாதுகாப்பு நடைமுறை பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் பிரிட்டிஷ் விமானப்படை வீரர்களுக்கான அனுமதியும் அடங்கும். அதாவது இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் விமானப்படை வீரர்களுக்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்டவையும் அடங்கும். எனவே எஃப்-35 விமானம் விமான நிலையத்தின் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரால் (CISF) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

யுகே கேரியர் ஸ்டிரைக் குழுவிற்கு தலைமை தாங்கிய எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (ஆர்09) விமானம் தாங்கி கப்பலுக்கு சொந்தமான இந்த எஃப்-35பி ரக போர் விமானம் ஜூன் 14 அன்று மோசமான வானிலை காரணமாக பலமுறை முயன்றும் கப்பலில் தரையிறங்க முடியாமல் போனது. அப்போது, எரிபொருள் குறைவாக இருந்ததால், SQUAWK 7700 என்ற அவசர குறியீடு செயல்படுத்தப்பட்டது. இந்த குறியீடு அவசரக்காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே, உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
தரையிறக்கப்பட்ட விமானம் விமான நிலையத்தின் பே 4-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது விஐபி விமானங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடமாகும். இந்த வகை விமானங்களில் 8,278 கிலோகிராம் வரை எரிபொருளை நிரப்ப முடியும். இதன் மூலம் 2,200 கி.மீ வரை பறக்க முடியும். இப்படி இருக்கையில் எரிபொருள் தீர்ந்துவிட்டது? என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விமானம், விமானம் தாங்கி கப்பலினுடையது என்பதால், கப்பலில் தரையிறங்க முயன்றிருக்கிறது. இருப்பினும் வானிலை சரி இல்லாததால் மீண்டும் மீண்டும் முயன்று பார்க்கப்பட்டிருக்கிறது. இப்படியாக எரிபொருள் தீர்ந்திருக்கிறது என்று தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விமானம் தரையிறங்கிய பின்னர் நடந்த கூத்துக்கள் கவனம் பெற்றிருந்தன. அதாவது, விமானி விமானத்தை விட்டு கொஞ்சம் கூட நகர மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.
ஐயா ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க, கொஞ்சம் ஓய்வெடுங்க என்று விமான நிலைய அதிகாரிகள் அழைத்தும் கூட அவர் நகரவே இல்லை. எனவே வேறு வழியில்லாமல் விமானத்தின் பக்கத்தில் சேர் போட்டு கொடுக்கப்பட்டது. அதில் அமர்ந்திருந்தார். வெயில் மண்டையை பிளக்கவே, ஒரு வழியாக ஓய்வறைக்கு வந்திருக்கிறார். இப்போது விமானம் திறந்தவெளியில் நிற்கவைக்கப்பட்டு CISF வீரர்களால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications