பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட சொன்னார்.. ஞானேஷ்குமார் மீது கேரளா முன்னாள் தலைமை செயலர் புகார்
திருவனந்தபுரம்: எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குறித்து ஏராளமான முறைகேடு புகார்கள் வெளியாகி வருகின்றன. கேரளாவை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியை, பாஜக சார்பில் போட்டியிட ஞானேஷ்குமார் கேட்டதாக வெளியாகியுள்ள புகார் தலை சுற்ற வைக்கிறது.
கேரளாவை சேர்ந்த ஜி.ஜி தாம்சன் 1980 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. கேரளா அரசுத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். கடந்த 2015 முதல் 2016 வரை தலைமை செயலாளராக பணியாற்றினார். 2016 அவர் பணி ஓய்வு பெற்றார். ஞானேஷ்குமாரும் கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாவார். இந்நிலையில் ஞானேஷ்குமார் குறித்து ஜி.ஜி தாம்சன் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞானேஷ்குமாரால் பரபரப்பு
ஜி.ஜி தாம்சன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2019 நாடாளுமன்ற தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியில் பாஜக சார்பில் என்னை போட்டியிட ஞானேஷ்குமார் அறிவுறுத்தினார். பாஜகவிடம் இருந்து அல்லாமல் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி இப்படி சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனக்கு விருப்பம் இல்லாததால் போட்டியிட வேண்டாம் என மறுத்துவிட்டேன்.
அவர் இதை எங்களிடம் சொன்னபோது நாங்கள் இருவருமே பணியில் இருந்தோம். தேர்தலில் வெற்றி பெற்றால் நீ மத்திய அமைச்சராகவும் ஆகலாம் என அவர் கூறினார். எனக்கு தேர்தல் அரசியலில் விருப்பம் இல்லை என்பதால் மறுத்துவிட்டேன். பணியில் இருந்த ஒரு அதிகாரி பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிட சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது" என்றார். தாம்சனின் கருத்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆள் பிடிக்கும் வேலை
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஐஏஎஸ் அதிகாரியாக ஞானேஷ்குமார் எந்த பணியையும் செய்யவில்லை. பாஜகவுக்கு ஆள் பிடிக்கும் வேலையை தான் அவர் செய்தார். மோடியும், அமித்ஷாவும் இணைந்து இந்திய தேர்தல்களில் மேட்ச் பிக்ஸிங் செய்யும் பணியை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்" என்று கூறியுள்ளார். இதேபோல 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தாம்சனை போட்டியிட வலியுறுத்தியது. அந்த அழைப்பையும் அவர் மறுத்துவிட்டார்.



Click it and Unblock the Notifications
