சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அலர்ட்.. பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!
திருவனந்தபுரம்: கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுக்கா அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி என்ற பெண் உயிரிழந்தார். அடூர் பகுதியை தொடர்ந்து வாகமன் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் வைக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
கனமழை காரணமாக கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தவொரு அவசர சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் சதீசன் அறிவுத்தி உள்ளார். மேலும், கனமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறை மற்றும் அரசுத் துறைகள் தயாராக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
திருச்சூர் மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேரளாவில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருவதால் அதிகாரிகள் வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
தொடுபுழா அருகிலுள்ள மூவாற்றுப்புழா ஆறு, புனலூரில் உள்ள கல்லடா ஆறு, பாலாவில் உள்ள மீனாச்சில் ஆறு மற்றும் மணிமலை ஆறு, பம்பை ஆறு ஆகியவற்றில் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், நீர்வளத்துறை இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
