கேரளாவில் மட்டும் தங்கம் விலை குறைவாக இருக்கிறதே ஏன்? பின்னணி இதுதான்!
திருவனந்தபுரம்: இந்தியாவில், கேரளா தான் மிகக் குறைந்த தங்கம் விலை, கொண்ட மாநிலமாக திகழ்கிறது. அதேநேரம் தனிநபர் தங்க நுகர்வு விகிதத்தில் முன்னணியிலும் உள்ளது. ஆம், ஆண்டுக்கு 200 முதல் 225 டன் தங்கம் வாங்கி குவிக்கிறார்கள் கேரள மக்கள்.
கேரளாவில் தங்கம் விலை குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய துறைமுகங்களுக்கு கேரள மாநிலம் அருகாமையில் இருப்பதால், குறைந்த போக்குவரத்து செலவுகள், விலையை குறைக்க வசதியாக உள்ளன. கேரளாவில் குறைவான இறக்குமதி வரி இருப்பதும் தங்கம் விலை சற்று குறைவாக இருக்க காரணமாகிறது.

கேரளாவில் உள்ள திருச்சூர், நகை உற்பத்தியின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இங்கிருந்து தங்க நகைகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன, எனவே, திருச்சூரிலோ அல்லது கேரளாவிலோ நகை வாங்கும்போது இந்த போக்குவரத்து செலவு மிச்சப்படும்.
கேரளாவின் பல பகுதிகளில் காஸ்ட் ஆப் லிவ்விங் அதாவது வாழ்க்கை நடத்த தேவைப்படும் செலவு பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் குறைவு. இதனால், தங்க வியாபாரிகள் குறைந்த செலவில் செயல்பட முடியும், இதன் விளைவாகவும் விலைகள் குறைகிறது.
எடுத்துக்காட்டாக, நவம்பர் 28 அன்று, டெல்லியில் 24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ .7750 ஆக இருந்தது, அதே நேரத்தில் கேரளாவில், அதுவே ரூ .7735 ஆக இருந்தது. இதேபோல், 22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை டெல்லியில் ரூ .7105 ஆக இருந்தது, ஆனால் கேரளாவில் ரூ .7090 ஆக இருந்தது, இது ரூ .15 வேறுபாடு.
கேரளாவில் நகைத் தொழில் பெரும்பாலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களைப் போல அதிக செலவுகள் இல்லாமல் செயல்பட முடியும், இதனால் விலைகளை குறைக்க முடியும். கேரளாவில் ஏராளமான தங்க வியாபாரிகள் உள்ளனர். இது சந்தையில் போட்டி சூழலை உருவாக்கி, விலைகளை குறைக்கிறது.
கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை தங்கம் விலை குறைவாக உள்ள மாநிலங்களாகும். இந்த மாநிலங்களில் விலை வேறுபாடு ஒரு கிராமுக்கு ரூ .5 முதல் ரூ .20 வரை இருக்கும்.
எனவே, பட்டு சேலை வாங்குவோர் காஞ்சிபுரம் போவதை போல, நகை வாங்க மக்கள் கேரளா போக ஆரம்பித்துள்ளனர். அதிலும் திருச்சூர் முக்கியமான நகை கொள்முதல் பகுதியாக மாறிப்போயுள்ளது. நம்மூரிலுள்ள பல பிரபல நகைக்கடைகளின் சொந்த ஊர் திருச்சூர்தான்.
கேரளாவில் தங்கம் மலிவாக கிடைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வரலாற்றுப் பின்னணி, பொருளாதார காரணிகள், அரசின் கொள்கைகள் மற்றும் சந்தைப் போட்டி ஆகியவை முக்கிய காரணிகளாகும். இந்த காரணிகள் ஒன்றிணைந்து கேரளாவை தங்கம் வாங்க ஒரு விரும்பத்தக்க இடமாக மாற்றியுள்ளன.












Click it and Unblock the Notifications