Kerala 12th Result: கேரளாவில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகின! தொடர்ந்து சரியும் தேர்ச்சி விகிதம்
திருவனந்தபுரம்: கேரளாவில் மாநில பாடத்திட்டத்தில் பயின்று தேர்வெழுதிய +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்ச்சி விகிதம் 77.81% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவான தேர்ச்சி விகிதமாகும்.
கடந்த பல ஆண்டுகளாகவே தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பதால், கேரள அரசு பள்ளி கல்வியில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

கேரள உயர்நிலைக் கல்வி இயக்குநரகம் (DHSE), இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டிருந்தது. அதன்படி தேர்வெழுதிய 3,70,642 மாணவர்களில் 2,88,394 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 77.81% ஆக பதிவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 78.69% என இருந்தது.
- 2023 ஆம் ஆண்டில் - 82.95%
- 2022 ஆம் ஆண்டில் - 83.7%
- 2021 ஆம் ஆண்டில் - 87.94%
- 2020 ஆம் ஆண்டில் - 83.13%
- 2019 ஆம் ஆண்டில் - 84.33%
எனவும் தேர்ச்சி விகிதம் இருந்திருக்கிறது. இதில் கடந்த 2021ம் ஆண்டை தவிர, மற்ற ஆண்டுகளில் தேர்வு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது.
இந்த ஆண்டு தேர்ச்சியை பொறுத்தவரை, அறிவியல் பாடப்பிரிவில் 83.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற பாடங்களை விட அறிவியல் பாடத்தில்தான் அதிக தேர்ச்சி விகிதம் பதிவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து வணிகப் பாடப்பிரிவில் 74.21% பேரும், மனிதவியல் பாடப்பிரிவில் 69.16% பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தமிழகத்தை போலவே கேரளாவிலும், மாணவர்கள் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
மாணவர்களின் தேர்வு முடிவுகள் மதியம் 3 மணியளவில் வெளியாகியுள்ளது. keralaresults.nic.in, dhsekerala.gov.in மற்றும் pareekshabhavan.kerala.gov.in ஆகிய வெப்சைட்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். அதேபோல ஆதார் மற்றும் ரோல் நம்பரை பயன்படுத்தி DigiLocker செயலியிலும் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் ரிசல்ட்களில் வெளியாகியுள்ள மதிப்பெண்கள் சரியானவையா என்று ஒரிஜினல் மார்க் ஷீட்டில் உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மாற்றங்கள் இருப்பின் உடனடியாக கல்வித்துறை அதிகாரியை அணுக வேண்டும் எனவும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரிரு பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், துணைத்தேர்வில் பங்கேற்று உடனடியாக தேர்ச்சி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எழுத்தறிவில் தேசத்திற்கே முன்னோடியாக இருக்கும் கேரளாவில் +2 தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது அம்மாநில கல்வித்துறைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications