வயநாடு.. உயிரை பணையம் வைத்த ராணுவம்.. 3ம் வகுப்பு மாணவரின் நெகிழ்ச்சி கடிதம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து 7 வது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறி கேரளத்தைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவர் எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடிதம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29ம் தேதி ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, இன்று 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர், வாக்கி டாக்கி, ரேடார் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளத்தில் ஏஎம்பிஎல் என்ற பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ரயான் என்ற மாணவர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவர்களைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அன்புள்ள இந்திய ராணுவத்தினருக்கு , எனது அன்பான வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும், பெரும் மகிழ்ச்சியும் அடைந்தேன். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தங்களது பசியைப் போக்க பிஸ்கட் சாப்பிடும் வீடியோக்களைப் பார்த்தேன். அந்த பிஸ்கட் உங்களது பசியைப் போக்கியிருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து இயங்கி உடனடியாக ராணுவ வீரர்கள் பாலம் கட்டும் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. நானும் ஒருநாள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை பாதுகாப்பேன். அதற்காக ஆசைப்படுகிறேன் என்று எழுதியுள்ளார்.
சிறுவனின் இந்தக் கடிதத்தை இந்திய ராணுவம் தெற்கு கமாண்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், அன்புள்ள மாஸ்டர் ரயான், உங்களது இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்கள் மனதை ஆழமாகத் தொட்டன. இக்கட்டான சூழ்நிலைகளில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறோம் என்பதை உங்கள் கடிதம் உறுதிப்படுத்தியுள்ளது. எங்களால் முடித்த அனைத்தையும் செய்ய உங்களைப் போன்ற ஹீரோக்கள்தான் ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் ராணுவ சீருடை அணியும் நாளுக்காக நாங்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். இணைந்து நின்று, நம் நாட்டை பெருமைப்படுத்துவோம். உங்களின் தைரியத்துக்கு ஆயிரம் நன்றிகள் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications