ராகுல் யாத்திரையை பாதியில் விட்டுவிட்டு டெல்லி பறந்த கே.சி.வேணுகோபால்.. சோனியாவுடன் சந்திப்பு.. ஏன்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை. அது போல் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து வருகிறது. இதற்கு காரணமாக தலைமை இல்லை என்பதை மூத்த நிர்வாகிகள் சொல்லி வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்த போது 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில் அவர் தலைவராக்கப்பட்டார். இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தோல்வியை அடுத்து ராகுல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ராகுல்
இதன் பிறகு ராகுலிடம் எத்தனையோ முறை பேசியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் உடல்நலக் குறைவு உள்ளிட்டவைகளால் சோனியாவால் செயல்பட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தேவை என்று ஜி 23 என்ற பெயரில் 23 காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுதியிருந்தனர். கடிதம் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் பலர் கட்சியிலிருந்து விலகினர்.

குலாம் நபி ஆசாத்
அதில் முக்கியமானவர்கள் குலாம் நபி ஆசாத்தும், கபில் சிபலும் ஆவர். அவர் தனியாகவே கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். எனவே மீதமுள்ள மூத்த தலைவர்களையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காந்தி அல்லாத ஒருவரை தலைவராக்க திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி தேர்தலில் தான் போட்டியிடுவதாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் சோனியாவை டெல்லியில் சந்தித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.

அசோக் கெலாட்
அது போல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். கேரளாவில் 18 நாட்கள் தங்கி இந்த யாத்திரையை மேற்கொள்கிறார். கேரளாவில் ராகுல் யாத்திரைகளை முன்னிருந்து கவனித்து கொண்டவர் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால்.

திடீர் சந்திப்பு
யாத்திரை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று திடீரென டெல்லி சென்றுள்ளார் கேசி வேணுகோபால். இவர் அங்கு சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சோனியாவை சந்தித்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் கேரளாவை சேர்ந்த கே.சி. வேணுகோபாலும் சோனியாவை சந்தித்தது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

என்ன காரணம்
ஒருவேளை கே.சி. வேணுகோபாலும் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பு கேரளா காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தி குடும்பத்தை தவிர்த்து வேறு யாராவது தலைவராக வரவேண்டும், தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஜி23 குழுவில் ஒருவராக இருந்தவர் சசி தரூர்.












Click it and Unblock the Notifications