அந்த மனசு தான்யா கடவுள்.. திருமணத்துக்கு நடுவே ஊழியர்கள் உயிரை காப்பாற்றிய கேரளா பெண் மருத்துவர்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்த பகுதி. இயற்கையின் கொடையால் மட்டும் அதை கடவுளின் தேசம் என்றழைப்பதில்லை. மனித கடவுள்கள் செய்யும் சேவை காரணமாகவும் கேரளா கடவுளின் தேசமாக உயர்ந்து நிற்கிறது. கேரளாவை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர், தன் திருமணத்தின்போது மண்டபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கி அவர்களை காப்பாற்றி கடமையாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிரின் சுபையர். மருத்துவரான இவருக்கு, மருத்துவர் ரிஜாஸ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கண்ணூரில் உள்ள மண்டபத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமண ஏற்பாடுகள் கோலகலமாக நடந்தன. இல்லற வாழ்க்கையில் பயணிக்கும் தருணத்தை ஷிரினும், ரிஜாசும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

மணகோலத்தில் மருத்துவம்
உறவினர்களும், நண்பர்களும் மணமக்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தன. திருமணத்துக்கான சமையல் செய்து பரிமாறுவதற்கு ஒரு கேட்டரிங் குழு வந்திருந்தது. பரிமாறுவதற்காக வந்திருந்த இரண்டு பெண் ஊழியர்களுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில் ஒரு பெண்ணுக்கு மூக்கு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. மற்றொரு பெண் தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கினார்.
இந்த சம்பவத்தால் மண்டபத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. "ஆம்புலன்ஸை கூப்பிடுங்கள்".., "மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் வண்டியை எடுங்கள்" என்று ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி வந்தனர். திருமண நிகழ்வில் இருந்த ஒருவருக்கு, அட மணப்பெண் ஷிரின் சுபையரே மருத்துவர் தானே என யோசித்து அவரை உதவிக்கு அழைத்துள்ளார். மணமகள் ஷிரின் திருமண உடையில் இருந்தாலும், துளியும் தாமதிக்காமல் திருமணத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்து சென்றார்.
அந்த மனசுதான்யா கடவுள்
இரண்டு பெண்களுக்கும் உடனடியாக அவர் முதலுதவி சிகிச்சை வழங்கினார். மூக்கு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பெண்ணை, முன்னோக்கி சாய்ந்து அமர வைத்தார். பிறகு மூக்கின் மென்மையான பகுதியை 10 நிமிடங்கள் அழுத்திப் பிடிக்க அறிவுறுத்தினார். இதேபோல தலைசுற்றல் ஏற்பட்ட பெண்ணை படுக்க வைத்து, அவரது கால்களை உயர்த்தி வைத்து முதலுதவி செய்தார். இதனால் இரண்டு பெண்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
மண கோலத்தில் ஷிரின் கடமை தவறாமல் ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. "நான் வழக்கம் போல என் கடமையை செய்தேன். இது அவ்வளவு பெரிய விஷயமில்லை. எங்கு ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இதைத்தான் செய்வோம். நான் மருத்துவர் என்பதால் என்னிடம் உதவி கேட்டனர். என்னுடைய கடமையை செய்தேன். மக்கள் முதலுதவி குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என ஷிரின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
