யூடியூப் பார்த்து டயட்.. பரிதாபமாக பறிபோன இளம்பெண் உயிர்! நீங்களும் இந்த தவறை செய்யாதீங்க!
திருவனந்தபுரம்: உடல் எடையை குறைக்க டயட் இருந்ததால் 18 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் உரிய ஆலோசனையின்றி யூடியூப் பார்த்து சுயமாக டயட்டை பின்பற்றியதால் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடல் எடையை குறைக்க டயட் பின்பற்றுவது சரியா? எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும்? மருத்துவர்களின் அறிவுறுத்தல் ஏன் முக்கியம் என்பது குறித்து பார்ப்போம்.

கேரளாவின் கண்ணூரை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஸ்ரீநந்தா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக இவர் தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இளம்பெண் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நாகேஷ் பிரபு கூறுகையில்,
"ஸ்ரீநந்தா அனோரெக்ஸியா நெர்வோசாவால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, ஸ்ரீநந்தா நீண்ட நாட்களாக போதுமான அளவுக்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்திருக்கிறார். அன்றாடம் உடலுக்கு தேவையான சத்துகளுக்கான உணவை கூட இவர் எடுத்துக்கொள்ளவில்லை. பழச்சாறு, மோர், தயிர் என நீர் சார்ந்த உணவை மட்டுமே எடுத்து வந்திருக்கிறார். ஏறத்தாழ 6 மாதங்களாக இதையே இவர் செய்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு பிரச்சனை காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது இவரை சோதித்த மருத்துவர்கள் பிரச்சனையை கண்டறிந்து நன்கு சாப்பிடுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் ஸ்ரீநந்தா இதை கடைப்பிடிக்கவில்லை. எனவே உணவுக்குழல் சுருங்கி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்" என்று கூறியுள்ளனர்.
அனோரெக்ஸியா நெர்வோசா என்றால் என்ன?:
மேற்கு நாடுகளில் இந்த பிரச்சனை பலரிடம் இருக்கிறது. ஆனால் கேரளாவில் இது அரிதான ஒன்று. உடல் எடை அதிகமாக இருக்கிறது, எனவே சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு பெயர்தான் அனோரெக்ஸியா நெர்வோசா. இது ஒரு மனம் சார்ந்த நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதை தவிர்த்து வருவார்கள். இதனால் பசியின்மை பழக்கமாகிவிடும். அது தொடரவும் செய்யும். பெரும்பாலும் கால நேரத்தில் சாப்பிடாமல் இருப்பார்கள்.
மற்ற நேரங்களில் பழச்சாறு போன்றவற்றை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சாப்பிடவே தோன்றும். சாப்பிட தொடங்கிவிட்டால் அவர்களை உடல் ரீதியாக தேற்றிவிடலாம்.
ஆண்களுக்கு எவ்வளவு உணவு தேவை?:
ஒரு நாளைக்கு ஒவ்வொருக்கு எவ்வளவு உணவு தேவை என்பது அவர்கள் செய்யும் வேலையை பொறுத்தது.
குறைந்த உடல் செயல்பாடு கொண்ட 18-50 வயது வரை உள்ள ஆண்களுக்கு 2,200 - 2,400 கலோரிகள் தேவை. வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், ஐடி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு கலோரிகள் போதும்.
அதே மிதமான உடல் செயல்பாடு கொண்ட 18-50 வயது வரை உள்ள ஆண்களுக்கு 2,600 - 2,800 கலோரிகள் தேவை. பஸ் ஏறி அலுவலகம் செல்பவர்கள், அலுவலகத்திற்காக நடந்து செல்பவர்களுக்கு இவ்வளவு கலோரி போதும்.
அதிக உடல் செயல்பாடு கொண்ட 18-50 வயது வரை உள்ள ஆண்களுக்கு 3,000 - 3,200 கலோரிகள் தேவை. மரம் வெட்டுபவர்கள், கட்டிட தொழிலாளி, விளையாட்டு வீரர்கள் என வியர்வை அதிகம் சிந்தி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு குறைந்தபட்ச கலோரி தேவை. இதைவிட அதிகமாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.
பெண்களுக்கான உணவு தேவை எவ்வளவு?:
குறைந்த உடல் செயல்பாடு கொண்ட 18-50 வயது வரை உள்ள பெண்களுக்கு 1,800 - 2,000 கலோரிகள் தேவை.
மிதமான உடல் செயல்பாடு கொண்ட 18-50 வயது வரை உள்ள பெண்களுக்கு 2,000 - 2,200 கலோரிகள் தேவை.
அதிக உடல் செயல்பாடு கொண்ட 18-50 வயது வரை உள்ள பெண்களுக்கு 2,200 - 2,400 கலோரிகள் தேவை.
எப்படி உணவை எடுத்துக்கொள்வது?:
நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் 45-65% கார்போஹைட்ரேட்டுகள் தேவை. புரதம் ஆண்கள் எனில் 60-80 கிராம் பெண்கள் எனில் 50-60 கிராம். கொழுப்பு மொத்த உணவில் 20-30%, நார்ச்சத்து 25-30 கிராம், நீர் 2-3 லிட்டர் தேவை. இதுதான் சரிவிகித உணவு. சிம்பிளாக சொல்வனெில் காலையில் 3 இட்லி, 1 முட்டை, 1 பழம். மதியம் 2 கப் சாதம், 1 கப் பருப்பு / 100 கிராம் மீன்/சிக்கன், 1 கப் காய்கறிகள், 1 கப் தயிர். இரவு உணவாக 1-2 சப்பாத்தி அல்லது சிறிதளவு சாதம், 1 கப் சாம்பார் / ரசம், 1 கப் காய்கறிகள், 1 கப் தயிர். இதை பின்பற்ற வேண்டும்.
சிலருக்கு இணை நோய்கள் இருக்கும், வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் இருக்கலாம். எனவே மருத்துவர்களின் ஆலோசனை பெற்று டயட்டை பின்பற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications