Kerala lottery: ஓணம் பம்பர்.. ரூ.30 கோடி அடித்தாலும் பாதி வரிதான் கட்டனும்.. கையில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
திருவனந்தபுரம்: ரூ. 30 கோடி முதல் பரிசு கொண்ட கேரள ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Onam Bumper Lottery) குலுக்கல் இன்று நடக்க உள்ளது. முதல் பரிசு அடித்தால் முழு தொகையும் நம் கைக்கு கிடைக்காது.. வரி மட்டுமே ரூ.14 கோடி போய்விடும். மீதமுள்ள தொகை தான் கையில் கிடைக்கும்.
ரூ.500 கொடுத்து லாட்டரி டிக்கெட் வாங்கிய பலரும், முதல் பரிசு அடித்தால் கையில் எவ்வளவு கிடைக்கும் என கணக்கு போட்டபடி இருப்பார்கள். லாட்டரி கமிஷன், டிடிஎஸ் வரி பிடித்தம், செஸ் வரி என பெருமளவு தொகை வரியாகவே பிடிக்கப்பட்டு மீதி தொகை தான் கையில் கிடைக்கும்.

ரூ.30 கோடியும் அப்படியே கிடைக்காது
கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இன்னும் சில நேரங்களில் அதிர்ஷ்ட எண் எதுவென்று தெரிந்துவிடும் என்பதால் லாட்டரி பிரியர்கள் தங்கள் கையில் டிக்கெட்டை வைத்துக்கொண்டு முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு வரை முதல் பரிசு ரூ.25 கோடி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பரிசுத் தொகை ரூ.5 கோடி உயர்த்தப்பட்டு 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டம் இருந்தால் 500 ரூபாய் முதலீட்டில் 30 கோடி அள்ள முடியும் என்பதால் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள். கேரள லாட்டரிகளை பொறுத்தவரை பரிசு அடித்தால் முழு தொகையும் அப்படியே கையில் கிடைக்காது.
ரூ.14 கோடி வரியிலேயே போய்விடும்
லாட்டரி கமிஷன், டிடிஎஸ் வரி பிடித்தம், செஸ் வரி என பெருமளவு தொகை வரியாகவே பிடிக்கப்பட்டு இருக்கும். அட என்னங்க இது பித்தலாட்டமாக இருக்கு.. 30 கோடி ரூபாய் பரிசு என்று சொல்லிவிட்டு இப்படி வரி மேல் வரியாக சொல்கிறீர்களே எவ்வளவுதான் கையில் கிடைக்கும் அப்போ? என்று நீங்கள் மனதிற்குள் நினைப்பது புரிகிறது. ஓணம் பம்பரில் முதல் பரிசு ரூ.30 கோடி வெல்லும் அதிர்ஷ்டசாலி, ஏஜெண்ட் கமிஷனாக 10 சதவீதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதன்படி பார்த்தால் ரூ.3 கோடி ஏஜெண்ட் கமிஷனாக போய்விடும். அதற்கு அடுத்தபடியாக டிடிஎஸ் வரிபிடித்தம் 30 சதவீதம் ஆகும். மூன்றாவதாக 4 சதவீதம் சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரியாகவும், பிடித்தம் செய்யப்படும். சர்சார்ஜ் பிடித்தம் என கிட்டதட்ட 37 சதவீதம் வரியாக மட்டும் போய்விடும்.
2 ஆம் பரிசு கையில் எவ்வளவு கிடைக்கும்
இவற்றை எல்லாம் சேர்த்தால் ஓணம் பம்பரில் முதல் பரிசு வெல்பவருக்கு சுமார் ரூ.15,45,91,200 வரவு வைக்கப்படும். 30 கோடி பரிசுத்தொகையில் 14 கோடிக்கு மேல் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி பரிசு வெல்பவர்களும் இந்த வரி பிடித்தங்களில் இருந்து தப்ப முடியாது.
ரூ. 1 கோடி = 10 சதவீத கமிஷன், 30 சதவீத வரி விகிதம், சர்சார்ஜ் இவற்றை எல்லாம் சேர்த்து ரூ.59,11,200 கையில் கிடைக்க கூடும். இந்த தொகையில் சற்றேறக்குறைய மாற்றம் இருக்கும். கேரள அரசு லாட்டரி விதிகளில் இதனை உறுதி செய்யலாம்.





Click it and Unblock the Notifications
