ஆணவத்தின் உச்சம்! காரில் சாய்ந்த ஏழை சிறுவனை எட்டி உதைத்த இளைஞர்.. கேரளாவில் பரிதாப சம்பவம்
திருவனந்தபுரம்: சாலையோரமாக நின்றிருந்த காரில் சாய்ந்ததற்காக, ஒரு ஏழை சிறுவனை அந்த காரின் உரிமையாளரான இளைஞர் ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
6 வயதே ஆன அந்த பிஞ்சு சிறுவனை துளி கூட இரக்கமே இல்லாமல், ஏதோ நாயை மிதித்து தள்ளுவதை போல இளைஞர் எட்டி உதைத்த சிசிடிவி காட்சிகள் காண்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஆதாரமாக கொண்டு, அந்தக் கொடூர இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

உலகில் உலாவும் 'அற்ப' மனிதர்கள்..
நம்மிடையே உலவும் சில மனிதர்களின் தரம் கெட்ட நடவடிக்கைகளை பார்க்கும் போது 'மனிதன் ஒரு மகத்தான சல்லி பயல்' என பிரபல எழுத்தாளர் ஒருவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரிகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில், பணம் தான் பிரதானம், பணம்தான் அந்தஸ்து என நினைத்துக் கொண்டு, சில மனிதர்கள் உலாவுவதை பார்க்கும் போது மேற்கூறிய சொலவடைதான் நமது நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற மனிதர்களிடம் ஒரு பொதுவான மனநிலை இருக்கும். இவர்கள் பணத்தை வைத்துதான் பிற மனிதர்களை எடைப்போடுவார்கள். பணம் இல்லாதவர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். அப்படி இருப்பதுதான் 'ஸ்டேட்டஸ்' என்ற எண்ணமும் இந்த அற்பர்களுக்கு இருக்கும். அப்படி ஒரு 'அற்ப பதர்' செய்த செயலைதான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

கார் மீது சாய்ந்த ஏழை சிறுவன்..
கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலச்சேரிக்கு இளைஞர் ஒருவர் நேற்று காரில் வந்துள்ளார். அப்போது சிறிது நேரம் சாலையோரத்தில் அவர் தனது காரை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில், 6 வயதே ஆன சிறுவன் ஒருவன், கார் உரிமையாளர் உள்ளே இருப்பது தெரியாமல் அந்தக் காரின் மீது லேசாக சாய்ந்துள்ளார். அழுக்கான சட்டை, எண்ணெய் வைக்காத தலை, ஒல்லியான தேகம் என அவனை பார்க்கும் போதே ஒரு ஏழை வீட்டு சிறுவன் என்பது தெளிவாக தெரிகிறது.

எட்டி உதைத்த இளைஞர்..
இந்நிலையில், தனது காரின் மீது ஏழை சிறுவன் சாய்ந்திருப்பதை பார்த்த அந்த இளைஞருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. உடனே, காரில் இருந்து வெளியே இறங்கிய அந்த இளைஞர் பின்பக்கமாக வந்து, அந்த சிறுவனின் இடுப்பில் ஓங்கி உதைத்தார். ஏதோ தனக்கு நிகரான வயதுடைய நபரை உதைப்பதை போல அவர் உதைக்கிறார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பிஞ்சு சிறுவன், அதிர்ச்சியில் உதை வாங்கிய இடத்தை தடவிக்கொண்டே ஒதுங்கி நிற்கிறான். இதையடுத்து, பெரிய சாதனையை செய்துவிட்டது போல தனது காரில் அந்த இளைஞர் ஏறினார்.

சுற்றி வளைத்த பொதுமக்கள்..
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர், உடனடியாக அந்த காரை சுற்றி வளைத்தனர். காரில் இருந்து இறங்குமாறு அந்த இளைஞர்களை அவர்கள் கூப்பிட, அவரோ பயத்தில் காரின் உள்ளே இருந்தபடியே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அங்கு மேலும் மக்கள் கூட்டம் சேரவே அவர் காரை வேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பொதுமக்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். விசாரணையில், அவர் பொன்னியாம்பலம் பகுதியைச் சேர்ந்த சிஷாத் (25) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யார் கொடுத்த துணிச்சல்?
கார் மீது சிறுவன் சாய்வது பிடிக்கவில்லை என்றால், காரை ஸ்டார்ட் செய்திருந்தாலே அவன் சென்றிருப்பான். அப்படி இல்லையெனில், கார் கண்ணாடியை இறக்கி, நகர்ந்து செல்லுமாறு கூறியிருந்தாலே வேலை முடிந்திருக்கும். ஆனால், காரை விட்டு இறங்கி அந்த சிறுவனை உதைக்கும் துணிச்சலை இந்த இளைஞருக்கு எது கொடுத்திருக்கும். இதுவே ஒரு பணக்கார சிறுவன் காரில் சாய்ந்திருந்தால் அவனை எட்டி உதைக்கும் துணிச்சல் இவருக்கு வந்திருக்குமா? "ஏழைகள்தானே.." என்ற இளக்கார மனநிலைதான் இந்த துணிச்சலுக்கு காரணம்.












Click it and Unblock the Notifications