கேரளாவை வெல்லும் காங்..! லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு செம ஷாக்.. பாஜகவுக்கு ஜீரோ.. பரபர சர்வே
திருவனந்தபுரம்: கேரளா நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஸ்வீப் செய்யும் எனவும், ஆளும் இடது ஜனநாயக கூட்டணி 2 தொகுதியில் மட்டுமே ஜெயிக்கும் எனவும், பாஜக எவ்வளவு போராடினாலும் ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
கேரளாவில் இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி (LDF)ஆட்சி நடக்கிறது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் உள்ளார். கேரளாவை பொறுத்தமட்டில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தான் கடும் போட்டி என்பது இருந்து வருகிறது.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவை போல் கேரளாவிலும் பாஜகவுக்கு போதிய செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் சில ஆண்டுகளாக பாஜக கேரளாவில் கவனம் செலுத்தி வருகிறது. அங்கு கட்சியை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பாஜக மேலிடம் செய்து வருகிறது.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதற்கிடையே தான் தற்போது மாநிலங்கள் வாரியாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் கேரளாவில் இன்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள்? என்று Democracy Times Network சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த முடிவு என்பது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாறாக காங்கிரஸ் கூட்டணிக்கு உற்சாகத்தை வழங்கும் வகையில் உள்ளது.
அதாவது கேரளாவில் மொத்தம் 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கூட்டணி 45 சதவீத ஓட்டுகள் பெற்று 18 தொகுதிகளை அள்ளும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறாக கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) பின்னடைவை சந்திக்கும். இந்த கூட்டணி 33 சதவீத ஓட்டுகளை பெற்றாலும் கூட வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என டெமாக்கிரஸி டைம்ஸ் நெட்வொர்க் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜகவுக்கு வழக்கம்போல் கேரளாவில் செல்வாக்கு இல்லாத நிலை தான் உள்ளது. பாஜக 15 சதவீத ஓட்டுகளை பெற்றாலும் ஒரு இடங்கள் கூட கிடைக்காது என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் 7 சதவீத ஓட்டுகளை பெற்று தோல்வியை தழுவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications