கிட்டத்தட்ட கிளீன் ஸ்வீப்! உற்சாகத்தில் காங்கிரஸ்.. கேரளாவில் பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி! புது சர்வே
திருவனந்தபுரம்: தமிழகத்தை போலவே கேரளாவும் சட்டசபைத் தேர்தலுக்கு ரெடியாகி வருகிறது. இதற்கிடையே அங்குத் தேர்தல் நடந்தால் எந்தக் கட்சி வெல்லும் என்பது குறித்த சர்வே வெளியாகியுள்ளது. அதில் காங்கிரஸுக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் அங்குத் தேர்தல் களம் சுவாரசியமானதாக மாறியுள்ளது.
கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் இருக்கும் சூழலில் அதில் 2019ல் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வென்றது. 2024 லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் 20ல் 18ல் வென்றது. தென் மாநிலங்களில் காங்கிரஸ் வலிமையாக இருக்கும் நிலையில், கேரளாவிலும் அது எதிரொலித்தது.

காங்கிரஸ் தான்!
இதற்கிடையே இந்தியா டுடே சிவோட்டர் "மூட் ஆஃப் தி நேஷன்" சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் இன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற அதே 18 இடங்களை இப்போது தக்கவைக்கும் என மூட் ஆஃப் தி நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆதிக்கம் அங்கு வலிமையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மறுபுறம் இடதுசாரிகள் கூட்டணி மீதான அதிருப்தி அதிகமாகவே இருப்பதாக இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அங்குத் தேர்தல் நடந்தால் இடதுசாரி கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் சூழலில் ஒரு இடத்திலும் வெல்லாது என்பது இடதுசாரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது.
பாஜக
அதேநேரம் பாஜகவுக்கு ஓரளவுக்கு பாசிட்டிவ் நியூஸ் கிடைத்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வென்றிருந்த சூழலில், இந்த முறை அங்கு பாஜக கூட்டணி இரண்டு இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக ஆட்சியை அமைக்கவோ, அல்லது குறைந்தது எதிர்க்கட்சியாக உருவெடுக்கவோ கூட பல ஆண்டுகள் ஆகும் என்றாலும் இது டீசன்ட் வளர்ச்சியாகவே இருக்கிறது.
வாக்கு வங்கி
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் 2024 முடிவுகளிலிருந்து சற்று குறையும் எனச் சொல்லப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 47% வாக்குகளைப் பெற்ற நிலையில், இப்போது தேர்தல் நடந்தால் அதன் வாக்கு வங்கி 3% வரை குறையும் எனச் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜகவின் வாக்கு சதவீதம் 16-ல் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கும் என மூட் ஆஃப் தி நேஷன் சர்வே கூறுகிறது.
கேரளா தேர்தல்
இது லோக்சபா தேர்தல் என்று நடத்திய சர்வே முடிவுகளாகும். அதேநேரம் சட்டசபைத் தேர்தலில் இதுவே எதிரொலிக்கும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் கேரளா கடந்த இரு லோக்சாபா தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த போதிலும், கடந்த இரு சட்டசபைத் தேர்தல்களில் இடதுசாரிகளைத் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2026 மூட் ஆப் தி நேஷன் கணக்கெடுப்பின்படி, இன்று லோக்சபா தேர்தல் நடந்தால், பாஜக 287 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும். இது ஆகஸ்ட் 2025 ஆய்வில் கணித்த 260 இடங்களை விட அதிகம். பிரதமர் மோடிக்கு ஆதரவாக 57% கருத்து தெரிவித்துள்ளனர்.. இது ஆகஸ்ட் 2025 ஆய்வின் 58%-ஐ விடச் சற்று குறைவாகும்.












Click it and Unblock the Notifications