அச்சமூட்டும் கொரோனா கேஸ்கள்.. கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமா தமிழக அரசு?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 7500ஐ கடந்துள்ளது. அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10% அருகே உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல்வேறு நாட்டிலும் வைரஸ் பாதிப்பைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இருப்பினும், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், சில காலம் வைரஸ் குறைந்தாலும், மீண்டும் அவை அதிகரிக்கத் தொடங்குகிறது. நமது அண்டை மாநிலமாகக் கேரளாவிலும் இப்போது அதே நிலை தான்.

கேரளா வைரஸ் பாதிப்பு
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையையும் சரி, அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கொரோனா 2ஆம் அலை சரி சிறப்பான முறையில் கையாண்ட மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா இருந்தது. அம்மாநில அரசு அப்போது எடுத்த நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்தது. அதேபோல 2ஆம் அலை சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்படவில்லை. ஆனால், இந்த நிலைமை விரைவில் மாற தொடங்கியது. மத பண்டிகைக்குக் கேரள அரசு அறிவித்த தளர்வுகள் அங்கு கொரோனா அதிகரிக்க வழிவகை செய்தது.

7643 போருக்கு கொரோனா
அப்போது முதலே கேரளாவில் வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இடையில் சில வாரங்கள், கொரோனா குறைந்திருந்த நிலையில், இப்போது அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7643 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது அதேபோல ஒரே நாளில் 77 பேர் கேரளாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,002ஆக உயர்ந்துள்ளது.

அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்
அதேபோல பாசிட்டிவ் விகிதமும் கேரளாவில் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. கேரளாவில் தற்போது பாசிட்டிவ் விகிதம் 9.27%ஆக உள்ளது. ஒரு ஒப்பீட்டிற்குக் கூற வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பாசிட்டிவ் விகிதம் 1%க்கு குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதே கொரோனா பாசிட்டிவ் விகிதம் என்று அழைக்கப்படும். அதிகபட்சமாக திருச்சூரில் 1,017 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது,

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல திருவனந்தபுரம் -963 பேர், எர்ணாகுளம் -817 பேர், கோழிக்கோடு -787 பேர், கோட்டயம் -765 பேர், பாலக்காடு -542 பேர், கொல்லம் -521 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் 2,92,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 9,810 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10% பேருக்கு மட்டுமே மருத்துவச் சிகிச்சை அங்குத் தேவைப்படுகிறது.

தமிழ்நாடு எல்லை
இன்று அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 44 பேர் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் ஆகும். அதேபோல முன்களப் பணியாளர்களில் 80 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் எங்குத் தமிழ்நாட்டில் எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது. இதனால் தமிழ்நாடு கேரளா எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வேக்சின் 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது RT PCR சோதனை முடிவுகள் இருந்தால் மட்டுமே கேரளாவில் இருந்து வருவோர் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications