"சின்ன வயசுதான்.. இணை நோயும் இல்லை!" கேரளாவில் மங்கி பாக்ஸால் பலியான நபர் யார்! வெளியான பரபர தகவல்
திருவனந்தபுரம்: மங்கி பாக்ஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மங்கி பாக்ஸ் பாதிப்பு இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பல ஆயிரம் பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதியாகி உள்ளது.
இப்படி திடீரென வேகமாகப் பரவுவதால் மங்கி பாக்ஸை பொதுச் சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மேலும், மங்கி பாக்ஸ் குறித்த அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டது.

மங்கி பாக்ஸ்
இந்தியாவில் கடந்த வாரம் வரை யாருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்படாமலேயே இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் கேரளாவில் மூன்று பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியானது. இது மேலும் பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க மத்திய அரசும் தனியாக ஒரு குழுவை அமைத்துள்ளது.

கேரளா
இந்தச் சூழலில் கேரளா மாநிலத்தில் மங்கி பாக்ஸ் முதல் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய அந்த நபர், கடந்த சனிக்கிழமை உயிரிழந்து இருந்தார். இதனிடையே அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மங்கி பாக்ஸ் உறுதியானது. அந்த நபர் ஜூலை 22இல் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பினார். ஜூலை 26ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால், அந்த நபர் ஜூலை 27இல் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

சிகிச்சை
மருத்துவமனையில் அவருக்கு மங்கி பாக்ஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து ஜூலை 28ஆம் தேதி அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறத் தொடங்கினார். இருந்த போதிலும், ஜூலை 30ஆம் தேதி அவர் சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார். முன்னதாக ஐக்கிய அமீரகத்திலேயே அவருக்கு ஜூலை 19ஆம் தேதி மங்கி பாக்ஸ் டெஸ்ட் நடத்தப்பட்டு இருந்ததாகவும் அதிலும் அவருக்கு பாசிட்டிவ் என்றே முடிவு வந்ததாகவும் கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

சின்ன வயசு
உயிரிழந்த அந்த நபர் இளைஞர் தான் என்றும் அவருக்கு வேறு எந்தவொரு இணை நோயும் இல்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேர் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீணா ஜார்ஜ் கூறினார்.
Recommended Video

எப்படி பரவும்
மங்கி பாக்ஸ் வைரசுக்கு அதிக காய்ச்சல், நிணநீர் சுரப்பிகள், கொப்புளங்கள் போன்றவை தான் ஆரம்ப அறிகுறிகளாகும். கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள போதிலும், 10க்கும் குறைவான நபர்களே இதனால் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் பாதித்த நபரிடம் இருந்து வெளிவரும் நீர் மூலமே இது மற்றவர்களுக்குப் பரவும்.












Click it and Unblock the Notifications