சாதி பாகுபாடுக்கு எதிரான சலூனுக்கு மூடுவிழா.. கேரளா காங்கிரஸ் அரசின் நவீன தீண்டாமை.. என்ன ராகுல் இது
திருவனந்தபுரம்: மத்தியில் 2014க்குப் பிறகு காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், தென் இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தெலங்கானாவில் ஆளம் கட்சியாகவும், தமிழகத்தில் கூட்டணியிலும் வலுவாக உள்ளது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கேரளத்தில் மாறி மாறி போட்டியிட்டு வரும் நிலையில், கேரள மாநிலம், மூணாறில் தலித்துகளுக்காக தொடங்கப்பட்ட சலூன் கடையை மூடும் வகையில், காங்கிரஸ் அரசு நவீன தீண்டாமையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போ எல்லாம் யாருங்க சாதி பார்க்கறாங்க என்கிற பேச்சு இல்லாத ஊர் இல்லை. ஆனால் எல்லா ஊர்களிலும் சாதிய கொடுமைகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. வட இந்தியா, தென் இந்தியா என இந்தப் பிரச்சனைக்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு இல்லை. ஆணவ கொலைகள், நவீன தீண்டாமைகள் என சாதியம் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

சாதியப் பாகுபாடு புகார்
கேரளா இடது சாரி சிந்தனை நிறைந்த முற்போக்கு மாநிலம். இடுக்கி மாவட்டம், மூணார் அருகே வட்டவடா ஊராட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சாதிய பாகுபாட்டுக்கு எதிராக ஒரு சலூன் தொடங்கப்பட்டது. அந்த கிராமத்தை சேர்ந்த சலூன்கள் சாதிய பாகுபாட்டுடன் இயங்கியதாக புகார் எழுந்தது. பட்டியலின மக்களுக்கு முடி வெட்ட மறுப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக சாதியபாகுபாட்டுடன் இயங்கிய 2 சலூன்களின் உரிமத்தை ஊராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.
இதற்காக தான் ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை எதுவும் இல்லாமல், சாதிய பாகுபாடு இல்லாமல் சலூன் செயல்பட அனுமதித்தனர். சலூனை நடத்த பாக்யராஜ் என்பவரை அழைத்தனர். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக சென்றது. ஊராட்சி தணிக்கையில், சலூன் வாடகையின்றி செயல்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். மாதம் ரூ.5,000 வாடகை செலுத்த வேண்டும். முந்தைய மாதங்களுக்கான நிலுவையையும் கட்ட வேண்டும் என உத்தரவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீண்டாமை தலைதூக்கும்
சலூனை நடத்தி வரும் பாக்யராஜ் கூறுகையில், "கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருந்தபோது எனக்கு இந்த சலூன் நடத்த அழைப்பு வந்தது. முதல் வருடம் வாடகை இல்லாமல் கட்டிடம் நடத்தலாம். இரண்டாம் வருடத்தில் இருந்து மாதம் ரூ.500 வாடகை செலுத்தினால் போதும் என கூறினார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ரூ.3,000 வாடகை, ரூ.600 ஜிஎஸ்டி கட்ட சொன்னார்கள். இதற்கு முன்பு பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட மறுத்தனர்.
இந்த சலூன் மூடினால் பட்டியலின மக்களுக்கான சாதிய தீண்டாமை தலைதூக்கும். பட்டியலின மக்கள் முடி வெட்டவே முடியாத நிலை ஏற்படும். 2020க்கு முன்பு இந்த கிராமத்தின் பட்டியலின மக்கள் 10 கி.மீ பயணித்து எல்லப்பட்டி என்கிற கிராமம் சென்று முடிவெட்டினார்கள். என் கடையால் மக்கள் இங்கேயே முடி வெட்டினார்கள். தற்போது அந்த பழைய நிலை மீண்டும் தொடரவே வாய்ப்புள்ளது. மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்து பட்டியலின மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றார்.
சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்
பாக்யராஜின் கருத்தை சில நேர்மையான அதிகாரிகளும் ஆமோதிக்கிறார்கள். வட்டவடா ஊராட்சி அலுவலர்கள் கூறுகையில், "பாக்யராஜால் இவ்வளவு பெரிய வாடகையை கட்ட முடியாது. அவர் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். சலூன் வாடகை இல்லாமல் இயங்குவது தொடர்பாக ஊராட்சி கூட்ட குறிப்பில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இன்றைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை ஏற்பதா இல்லையா என்கிற குழப்பத்தில் உள்ளோம். அரசு தலையிட்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்" என்றார்.




Click it and Unblock the Notifications
