அண்ணாமலை அப்படி சொன்னாரே! கேரளாவில் பாருங்க.. பாஜக தலைவர் மகன் திருமணத்தில் பங்கேற்ற லுலு உரிமையாளர்
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் லுலு மாலை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ள நிலையில் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் மகன் திருமணத்தில் லுலு உரிமையாளர் பங்கேற்றுள்ளார்.
Recommended Video
கடந்த மார்ச் மாத இறுதியில் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்தார்.
அதன் ஒரு பகுதியாக கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான லுலு இண்டெர்நேஷனல் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

லுலு குழுமம்
கேரளாவின் கொச்சின் உட்பட உலகம் முழுவதும் 22 நாடுகளில் 230 பிரம்மாண்ட மால்களை நடத்தி வரும் லுலு குழுமம் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மால்களை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு சென்னையில் புதிய மால் ஒன்றை தொடங்க லுலு குழுமம் முடிவு செய்து இருக்கிறது.

அண்ணாமலை எதிர்ப்பு
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லுலு ஹைபர் மாலை தமிழ்நாட்டில் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் சிறு வணிகர்களுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டில் வைக்க பாஜக அனுமதிக்காது என்றார்.

வணிகர்கள் காணாமல் போவார்கள்
பாஜக எந்த நிறுவனத்துக்கும் எதிரான கட்சி இல்லை. ஆனால் லுலு நிறுவனத்தால் வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். துபாயில் கூட லுலு நிறுவனத்தை வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிறு வியாபாரிகளை அழைத்து பெரிய நிறுவனங்களை அமைக்கும் நோக்கில் இருக்கும் லுலுவை பாஜக தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காது என்றார்.

பாஜக தலைவர் மகன் திருமணம்
இது ஒருபுறம் இருக்க நேற்று கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் மகன் கே.எஸ்.ஹரிகிருஷ்ணன் திருமண விழா கோழிக்கோட்டில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, மெகா ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் லுலு உரிமையாளர்
இந்த திருமண விழாவில் பங்கேற்க லுலு குழும தலைவர் யூசுப் அலிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று திருமண விழா வரவேற்பில் யூசுப் அலி கலந்துகொண்டார். அவர், பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன், நடிகர் மம்மூட்டி, திருமண தம்பதியுடன் இணைந்து நின்று எடுத்த புகைப்படங்கள் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications