விழிஞ்சம் துறைமுகம் டூ கண்ணூர் ஏர்போர்ட்! ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் உம்மன் சாண்டி!
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில் அவர் முதலமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
மாணவராக இருந்த போதே அரசியலில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த உம்மன் சாண்டி, தனது 24வது வயதில் கேஎஸ்யு எனப்படும் மாணவர் அமைப்பின் மாநில தலைவராக பதவியேற்றார். அதன் பின்னர் எம்ல்ஏவாகவும், தொழில்துறை அமைச்சர் (1977-1978), உள்நாட்டுத் துறை அமைச்சர் (1982), நிதித்துறை அமைச்சர் (1991-1994), எதிர்க்கட்சித் தலைவராகவும் (2006-2011) பணியாற்றியுள்ளார். அதேபோல 2004-2006 மற்றும் 2006-2011 என இரண்டு முறை முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த காலத்தில் அவர் செயல்படுத்திய திட்டங்கள் இன்று பேசுபொருளாகியுள்ளன. தற்போது பெரும் சர்ச்சையில் இருக்கும் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் மிகப்பெரிய கட்டமைப்புகள் இவரது காலத்தில்தான் கட்டப்பட்டது. இதற்காக அவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றார். இந்த துறைமுகத்தில் பல்வேறு முடிச்சுகளை இவர் மிக சாதூர்யமாக அவிழ்த்தார். இதற்காக அவர் தனது சொந்த கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.
அதேபோல, இவரது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான மற்றொரு திட்டம் கொச்சி மெட்ரோவாகும். இந்த மெட்ரோவில் ஏராளமான சவால்கள் இருந்தன. சரியாக சொல்வதெனில், இதனை எப்படி தொடங்குவது என்பது குறித்து மிகப்பெரிய கேள்விக்குறி அப்போது இருந்தது. உம்மன் சாண்டிதான் இதனை உடைத்து, மெட்ரோ அமைவதற்கான புது வழியை உருவாக்கி கொடுத்தார். 2012ம் ஆண்டு இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கின. இன்று கொச்சி மெட்ரோ கேரளாவின் நவீன அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.
கண்ணூர் விமான நிலையமும் இதேபோன்ற பஞ்சாயத்துகளில் சிக்கி தவித்த திட்டம்தான். அதாவது, இந்த விமான நிலையத்திற்கான திட்டம் 1997ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், இதற்கான அனுமதி என்பது 2008ல்தான் மத்திய அரசு வழங்கியது. எனவே இதன் கட்டுமான பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வந்தன. இதனை கவனித்த அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டி, கட்டுமான பணிகளை வேகமாக தொடங்கவும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் இதை கட்டி முடிக்கவும் உத்தரவிட்டார்.
தற்போது கண்ணூர் விமான நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. உம்மன் சாண்டியின் இந்த சாதனைகள் வரிசையில் மிகவும் முக்கியமானது, மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி எனும் திட்டம்தான். இந்த திட்டம் மூலம் கேரளாவில் 31 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் முளைக்க தொடங்கின. அதேபோல கேரளாவில் 40 ஆண்டுகளாக முடங்கியிருந்த தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை அமைக்கும் பணி உம்மன்சாண்டி ஆட்சியில் மீண்டும் புத்துயிர் பெற்றது. இப்படியாக நவீன கேரளத்திற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார் உம்மன் சாண்டி












Click it and Unblock the Notifications