ஜாமீனில் வர முடியாது.. பதஞ்சலி பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரளா மாநிலம் பாலக்காடு நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி ஆயுர்வேதம் என்ற பெயரில் மருந்து நிறுவனத்தை நிறுவி உள்ளார். இவரது இந்த மருந்து நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக கொரோனா காலத்தில் பாபா ராம்தேவ் செய்த விளம்பரம் பெரும் விவாதமானது.

கொரோனா பாதிப்பை நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று அவர் விளம்பரம் செய்தார். அதோடு தனது தயாரிப்புகளை அவர் விளம்பரப்படுத்தி விற்க முயன்றார்.
இதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் தவறான விளம்பரம் மூலம் தனது தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்வதாக கேரளா மாநிலம் மருந்து ஆய்வாளர் சார்பில் பதஞ்சலியின் துணை நிறுவனமான திவ்யா பார்மஸி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு என்பது பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி ஆஜராக வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்றைய தினம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது. அதோடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளையில் நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். பாபா ராம்தேவ் இப்படியான வழக்கு தொடர்பான சிக்கலை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இவர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகிறார். யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
முன்னதாக போலியான விளம்பரம் தொடர்பாக பதஞ்சலி மீது தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேபோல் மும்பை உயர்நீதிமன்றம் பதஞ்சலிக்கு ரூ.4 கோடி அபராதம் விதித்தது. இன்னும் பல இடங்களில் வழக்குகள் நடந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications