"இன்று பலருக்கு தூக்கமே வராது!" டெல்லியிலிருந்து ஓடி வந்த சசி தரூரை.. வைத்து கொண்டே மோடி தாக்கு
திருவனந்தபுரம்: இன்று திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் துறைமுகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேசினார். இந்தியா கூட்டணியைச் சாடும் வகையில் பலருக்கு இன்றிரவே தூக்கமே வராது எனப் பிரதமர் மோடி பேசினார்.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டில் கட்டப்பட்ட முதல் டீப் வாட்டர் டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாகும். இதற்கு முன்பு வரை பெரிய சர்வதேச கப்பல்களை இந்தியாவில் நிறுத்த முடியாது. இதனால் அந்தக் கப்பல்கள் கொழும்பிற்குச் சென்று, அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு வர வேண்டி இருந்தது.

விழிஞ்சம் துறைமுகம்
அந்த நிலையை விழிஞ்சம் துறைமுகம் மொத்தமாக மாற்றப்போகிறது. பிபிபி எனப்படும் அரசு- தனியார் பங்களிப்பில் ரூ.8,867 கோடி செலவில் இந்தத் துறைமுகம் கட்டப்பட்டது. அதானி குழுமம் இந்தத் துறைமுகத்தைக் கட்டியுள்ளது. இதற்கிடையே இந்தத் துறைமுகத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்பி சசி தரூர், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோரை மேடையில் வைத்து கெண்டே எதிர்க்கட்சிகளைச் சாடினார். காங்கிரஸ் எம்பி சசி தரூர் இப்போது மெல்ல பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அவரை வைத்துக் கொண்டே இந்தியா கூட்டணியைப் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
தூக்கம் வராது
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "முதல்வரிடம் [பினராயி விஜயன்] நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.. நீங்கள் இந்தியா கூட்டணியின் வலுவான தூண். சசி தரூரும் கூட இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது" என்று அவர் பேசினார்.
அதாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியில் அதானிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் இதன் மூலம் முறையற்ற லாபம் அடைவதாகவும் விமர்சித்து வருகின்றன. குறிப்பாகக் காங்கிரஸின் ராகுல் காந்தி பல்வேறு இடங்களின் அதானி கடுமையாகச் சாடி வருகிறார். இந்தச் சூழலில் அதானி கட்டிய துறைமுகத்தின் திறப்பு விழாவில் பினராஜி விஜயன், சசி தரூர் பங்கேற்றுள்ள நிலையில், அதை வைத்தே பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

டெல்லியில் இருந்து வந்த சசி தரூர்
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் இன்று விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். விழிஞ்சம் துறைமுகம் கட்டுமான பணிகள் தொடங்கியது முதலே சசி தரூர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறார். இது தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் கூட்டங்களிலும் பங்கேற்கிறார். இப்போது கூட சசி தரூர் டெல்லியிலேயே இருந்தார். விழிஞ்சம் துறைமுக நிகழ்ச்சியில் பங்கேற்கவே அவர் டெல்லியில் இருந்து கேரளா வந்தார். டெல்லியில் அவரது விமானம் தாமதம் ஆன போதும் எப்படியோ அடித்துப் பிடித்து பிரதமரை வரவேற்க வந்ததாக அவரே தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
பாஜக ஆதரவு நிலைப்பாடு?
சசி தரூர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதாக விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில் மேடையில் பிரதமர் மோடி- தரூர் உரையாடல் பலரது கவனத்தை ஈர்த்தது.. மேடையில் இருந்த மற்ற பிரமுகர்களைப் பார்த்து வணக்கம் என மட்டும் சொன்ன பிரதமர் மோடி, சசி தரூரை பார்த்தவுடன் சிரித்துக் கொண்டே கைகளைப் பிடித்துக் கொண்டார். இருவரும் சில நொடிகள் உரையாடினர். இதையும் பிரதமர் மோடியின் பேச்சையும் வைத்து ஏற்கனவே காங்கிரஸ் தொண்டர்கள் சசி தரூரை மீண்டும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
முன்னதாக பஹல்காம் தாக்குதல் விவகாரத்திலும் அவர், பாகிஸ்தான் மீது முதலில் தாக்குதல் நடத்த வேண்டும்.. அதன் பிறகு மத்திய அரசைப் பற்றிப் பேசலாம் என்றும் எந்தவொரு நாட்டிலும் உளவுத் துறையில் சிக்கல் இருக்கவே செய்யும் என்பது போலவும் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சையே காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications