18 படியேறி..சபரிமலை ஐயப்பனை கண்ணீர் மல்க தரிசித்த செளமியா அன்புமணி!50 ஆண்டு கனவு நனவானதாக நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: இருமுடி கட்டி விரதம் இருந்து 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும் பசுமைத்தாயகம் தலைவருமான சௌமியா அன்புமணி. ஐயப்பனை காண வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு, 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறி உள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து காடு மலை கடந்து தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். கார்த்திகை மார்கழி மாதங்களில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை மிகச் சிறப்பு வாய்ந்தது.

அப்போது ஐயப்ப பக்தர்கள் 40 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள். மேலும் மாசி, பங்குனி போன்ற வருடத்தின் அனைத்து மத துவக்கத்திலும் சபரிமலை நடை திறப்பது வழக்கம் அப்போதும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர்.
கடந்த ஆண்டு முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக கூட்டம் இருப்பதால் மாசி, பங்குனி போன்ற மாதங்களில் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்போது கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் எளிதாக தரிசனம் செய்யலாம். மேலும் கடந்த சில நாட்களாக திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.
சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா..!🙏#Sabarimala | #ayyappaswamy | #ayyappadevotional pic.twitter.com/aRct5U3umM
— Sowmiya Anbumani (@Sowmiyanbumani) March 18, 2025
அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்திருக்கிறார். சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய செல்வதில்லை. அதே நேரத்தில் 50 வயதுக்கு பிறகு அவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் சிறுவயதிலிருந்தே ஐயப்பனின் தரிசனம் காண வேண்டும் என்ற 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறி உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் சௌமியா அன்புமணி. பம்பையில் இருந்து படிக்கட்டு வழியாக சன்னிதானம் சென்று 18 படிகளை வணங்கி கண்ணீர் மல்க சுவாமி தரிசனம் செய்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications