மூவர்ணக் கொடி நிறத்தில் "கிரில் சிக்கன்.." பிரபல 'ஃபுட்' யூடியூப் சேனலுக்கு வந்த சிக்கல்!
திருவனந்தபுரம்: தேசியக் கொடி நிறத்தில் கிரில் சிக்கன் தயாரித்து யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட பிரபல கேரள யூடிபருக்கு சிக்கல் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பதிவேற்றம் செய்வது டிரெண்டாக உள்ளது. அதிலும் வீடியோக்களுக்கு கிடைக்கும் பார்வையாளர்களுக்கு ஏற்ப பணமும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கொடுக்கின்றன. இதனால், பலரும் சுற்றுலா, பஸ் வீடியோ, சமையல் வீடியோ என தங்களுக்கு பிடித்த விஷயங்களில் கன்டெண்ட்களை உருவாக்கி பல ஆயிரம் முதல் லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.

அந்த வகையில், யூடியூப் சேனல்களில் புட் ரிவியூ மற்றும் உணவு தயாரிப்பு தொடர்பான யூடியூப் சேனல்களும் மிகவும் பிரபலமாக உள்ளன. மொழி தெரியாதவர்கள் கூட இதுபோன்ற புட் யூடியூப் சேனலுக்கு அதிகம் ரசிகர்களாக உள்ளனர். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. கேரளாவை சேர்ந்த பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான ஒரு வீடியோவுக்கு எதிராக புகார் கிளம்பியிருக்கிறது.
அதாவது, அந்த யூடியூப் சேனலில் குழுவாக உணவு தயாரித்து , அதை செய்முறையுடன் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சுதந்திர தினத்தன்று சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சிக்கன் கிரில்லை மூவர்ண கொடி நிறத்தில் தயாரித்து இருக்கிறார்கள். அதாவது பச்சை, வெள்ளை, சிகப்பு நிறத்தில் சிக்கன் கிரில் செய்யப்பட்டது. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகியது.
வீடீயோ வெளியான நிலையில், கேரளாவின் கஜகூட்டம் பகுதியை சேர்ந்த ஜிதின் என்பவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில், இந்த வீடியோ இடம் பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இதுபோன்ற புகார்கள் தேவையற்றது என நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த அடிப்படையில் பார்த்தால், தேசியக் கொடி நிறத்தில் செய்யப்படும் கேக்குளைக் கூட வெட்ட முடியாது என பலரும் புகார் தெரிவித்து உள்ளனர். எனினும் இது தொடர்பாக யூடியூப் சேனல் தரப்பினர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போது வரை அந்த வீடியோவும் இடம் பெற்றுள்ளது. 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கிலும் முன்னிலையில் உள்ளது. குறிப்பிட்ட யூடியூப் சேனலுக்கு எதிராக புகார் வந்துள்ளதை உறுதி செய்துள்ள போலீசார், இதுவரை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் சைபர் பிரிவு போலீசாருடன் இது குறித்து ஆலோசித்து வருகிறோம் எனவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications