கேரளா முதல்வராகும் கேசி வேணுகோபால்? ராகுல் காந்தி எடுத்த முடிவு.. ரமேஷ் சென்னிதாலா - சதீசன் கடும் கோபம்
திருவனந்தபுரம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 4ம் தேதி ரிசல்ட் வெளியாகியும் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. கேரளா முதல்வராக கேசி வேணுகோபாலை நியமனம் செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ள நிலையில்அதற்கு ரமேஷ் சென்னிதாலா, சதீசன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கேரளாவின் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.
கேரளாவில் 2016, 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக பினராயி விஜயன் இருந்தார். கடந்த மாதம் 9 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் மெஜாரிட்டிக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியனாலும் கூட இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. தலைவர்கள் இடையே முதல்வர் பதவியை பிடிக்க நடக்கும் போட்டி தான் இதற்கு முக்கிய காரணம்.
முதல்வர் ரேஸில் 3 பேர்
அதாவது கேரளாவில் முதல்வர் பதவியை எட்டிப்பிடிப்பதில் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒன்று கேசி வேணுகோபால். 2வது ரமேஷ் சென்னிதாலா. 3வது கேடி சதீசன். இதில் கேசி வேணுகோபாலை கேரளா முதல்வராக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் பதவி தங்களுக்கு தான் வேண்டும் என்று ரமேஷ் சென்னிதாலா, கேடி சதீசன் ஆகியோர் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதனால் கட்சி மேலிடம் முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் தான் 3 தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் விரைவில் 3 பேரும் அவரை சந்தித்து பேச உள்ளனர்.
கேசி வேணுகோபாலுக்கு ராகுல் சப்போர்ட்
இதில் கேசி வேணுகோபால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவிற்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொது செயலாளராக செயல்பட்டு வருகிறார். கேரளாவின் ஆழப்புழா தொகுதியின் எம்பியாக இருக்கிறார். இவரை தான் ராகுல் காந்தி முதல்வராக்க விரும்புகிறார். இதுதொடர்பாக ராகுல் காந்தி - கேசி வேணுகோபால் ஆகியோர் தனியே சந்தித்து பேச உள்ளனர். இதனால் இவர் கேரளா முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கேடி சதீசன் கடும் அதிருப்தி
அதுமட்டுமின்றி கேசி வேணுகோபாலை முதல்வர் பதவிக்கு ஆதரிக்க அடுத்த 2 நாட்களில் கட்சி தலைவர்கள், தொண்டர்களை சம்மதிக்க வைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் முதல்வர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரமேஷ் சென்னிதாலா, கேடி சதீசன் ஆகியோர் கடும் கோபத்தில் உள்ளனர். குறிப்பாக கேரளா முதல்வராக கேசி வேணுகோபால் வருவதை கேடி சதீசன் துளியும் விரும்பவில்லை. இதனை ராகுல் காந்தியிடமே அவர் நேரடியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது ஆதரவாளர்கள் கேரளாவில் கேசி வேணுகோபாலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.
தந்தால் முதல்வர் பதவி தாங்க
மேலும் கேசி வேணுகோபாலிடம் கேடி சதீசனிடம் முக்கிய இலாக்காவின் அமைச்சராக இருக்கும்படி மேலிடம் தெரிவித்துள்ளது. அதற்கு அவர் பதவி என்றால் முதல்வர் பதவி தாங்க. இல்லாவிட்டால் எந்த பொறுப்பும் வேண்டாம் என்று கறாராக கூறிவிட்டாராம். அதேபோல் இன்னொரு மூத்த அரசியல்வாதியாக ரமேஷ் சென்னிதாலாவும் முதல்வர் பதவியை எதிர்பார்க்கிறார். ஆனால் அவரை சபாநாயகராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது. இதனால் அவரும் அதிருப்தியில் உள்ளார்.
இதனால் கேரளா காங்கிரஸ் கட்சியில் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கேசி வேணுகோபாலை எடுத்து கொண்டால் கேரளா அரசியலை விட தேசிய அரசியலில் தான் உள்ளார். ஆனால் ரமேஷ் சென்னிதாலா, கேடி சதீசன் ஆகியோர் கேரளா மாநில அரசியலிலேயே பயணித்து வருபவர்கள்.
ரமேஷ் சென்னிதாலா - கேடி சதீசன் யார்?
இதில் ரமேஷ் சென்னிதாலா காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர். 2016ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றபோது சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டுள்ளார். இவர் தற்போது ஹரிபாத் தொகுதியில் 23,377 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டிடி ஜிஸ்மனை வீழ்த்தி உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமின்றி கேரளா அரசியலில் கேசி வேணுகோபால், விடி சதீசனை விட அதிக அனுபவம் உள்ளவர்.
அதேபோல் கேடி சதீசனும் காங்கிரஸின் மூத்த தலைவர் ஆவார்.இவர் தற்பாது பரவூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது கேரளா சட்டசபையில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெல்ல கேடி சதீசன், ரமேஷ் சென்னிதாலா என இருவரும் முக்கிய காரணம். அதோடு இருவருக்கும் கேரளாவில் தனிப்பட்ட முறையில் அரசியல் செல்வாக்கு உண்டு. இதனால் காங்கிரஸ் மேலிடம் இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது.
காங்கிரஸ்க்கு எவ்வளவு இடம்?
முன்னதாக கேரளா சட்டசபை தேர்தலில் 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஐஎன்டி கட்சி, ஆர்எஸ்பி கட்சிகள் தலா 3 தொகுதிகளிலம், சிஎம்பி, கேடிபி, கேசி (ஜே), ஆர்எம்பிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
மா. கம்யூ வீழ்ச்சி - பாஜக எழுச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 தொகுதிகளிலும், ஆர்ஜேடி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முறை 3 தொகுதிகளில் வாகை சூடி எழுச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் கேரளாவின் அடுத்த முதல்வர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications