இனி இளநீர் சாப்பிடக் கூடாது.. லோகோ பைலட்களுக்கு வந்த கட்டுப்பாடு.. தெற்கு ரயில்வே போட்ட உத்தரவு!
திருவனந்தபுரம்: லோகோ பைலட் என்று அழைக்கப்படும் ரயில் இன்ஜின் டிரைவர்கள் இனி பணியின் போது இளநீர் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது என்று தெற்கு ரயில்வே வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவுக்கு ரயில் இன்ஜின் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணியின் போது இளநீர், குறிப்பிட்ட வகை பழங்கள், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள், வாய்க்கு புத்துணர்ச்சியூட்டும் இனிப்பு வகைகள் சாப்பிடுவதை தவிரிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை எதற்கான வெளியிடப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.

அதில், ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவி மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹால் அளவு அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. ஆனால் உடனடியாக அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால், அதில் எந்த மாறுபாடுகளும் தெரிவதில்லை. இதற்கான காரணங்கள் குறித்து லோகோ பைலட்களிடமே கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு ரயில் இன்ஜின் டிரைவர்கள், தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் உள்ளிட்டவை சாப்பிட்டதாக ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை கூறி இருக்கின்றனர். அதேபோல் புத்துணர்ச்சி கொடுக்கும் இனிப்புகளை சாப்பிடுவதாக கூறியுள்ளனர். இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் இனி இளநீர், குளிர்பானங்கள், புத்துணர்ச்சி கொடுக்கும் இனிப்புகள், பழங்கள் உள்ளிட்டவை சாப்பிடக் கூடாது என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு லோகோ பைலட்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக லோகோ பைலட்கள் கூறுகையில், ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் கோளாறு இருக்கிறது. அதனை மாற்றாமல், ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரியா? கருவில் பிரச்சனை இருந்தால், அதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், ரயில்வே நிர்வாகத்தின் சுற்றறிக்கையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications