ஐயப்பனுக்காக அள்ளிக் கொடுத்த பக்தர்கள்! இந்த ஆண்டு சபரிமலை உண்டியல் வருமானம் 440 கோடி!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் மட்டும் 53 லட்சத்து ஒன்பதாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 440 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. சபரிமலையில் கடந்த 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.
பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை 'சுவாமியே சரணம் ஐயப்பா" என கோஷம் விண்ணைப் பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 20ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பனை வளர்த்த பந்தளம் மன்னர் சார்பாக பிரதிநிதியான ராஜ ராஜ வர்மன் ஐயப்பனை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதி முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி நடையை அடைத்து, பிறகு 18 படி வழியாக கீழே வந்து கோயிலுக்கான சாவியையும் இந்த ஆண்டு வருமானத்தையும் பந்தள மன்னர் குடும்பத்திற்கு ஒப்படைக்கும் வகையில் பண முடிப்பை வழங்கினார். அதையெல்லாம் கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும் மன்னர் பிரதிநிதி வரும் காலங்களில் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என கூறி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட திருவாபரண பெட்டியை பெற்றுக் கொண்டு சென்றார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை காலத்தில் பக்தர்களின் தரிசனம் விபரம் மற்றும் காணிக்கை விபரங்களை திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல பூஜையும், டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை மகர விளக்கு உற்சாகமும் நடைபெற்றது.
இந்த காலங்களில் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 440 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 80 கோடி ரூபாய் அதிகமாகும். கடந்த ஆண்டு 360 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த 440 கோடி ரூபாய் வருமானமும் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் பெறப்படும் உண்டியல் காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் கிடைத்தது ஆகும். மேலும் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உண்டியல் காணிக்கை பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் 500 கோடியை தாண்டும் வாய்ப்புள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் விர்ச்சுவல் க்யூ மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். கடந்த ஆண்டு சுமார் 49 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். இவர்களில் 10 லட்சத்து 3,350 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனம் செய்தவர்கள். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட ஆறு லட்சத்து 36 ஆயிரத்து 38 என்பது குறிப்பிடத்தக்கது.
சராசரியாக ஒரு நிமிடத்தில் 80 முதல் 90 பக்தர்கள் 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். கடந்த ஆண்டு 65 என்ற எண்ணிக்கையிலேயே இது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை சிறப்பாக இருந்ததாகவும், ஒரு சில பிரச்சனைகள் இருந்தாலும் அடுத்த ஆண்டு எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications