இன்று சபரிமலை கோயில் நடை திறப்பு.. பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்து கொள்ள 'ஆப்' அறிமுகம்
திருவனந்தபுரம்: உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை ஒன்றாம் தேதியான நாளை முதல் பக்தர்கள் வருவார்கள். மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை மார்கழி மாதங்களில் கோடிக்கணக்கானோர் வருவார்கள். அப்படி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்து கொள்ள புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலக அளவில் புகழ் பெற்ற புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்திருக்கிறது.. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் , கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. சுற்றிலும் மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளை கொண்ட சபரிமலை உச்சியில் ஏறி இறங்கி வர வேண்டும்.

ஆண்டு தோறும் சுமார் 5 கோடி மக்கள் மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலை திகழ்கிறது. இக்கோயிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு பக்தர்கள் 48 நாட்கள் கடும் தவம் இருப்பார்கள். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிவது வழக்கம்.
மாலை அணிந்தது முதலே விரதத்தை மேற்கொள்வார்கள். பின்னர் சபரிமலைக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வருவார்கள், எரிமேலி தொடங்கி பெருவழிப்பாதை வழியாக பல பக்தர்கள் வருவார்கள். பம்பை நதியை அடைந்து பின்னர் சபரிமலைக்கு செல்வார்கள். இதேபோல் பல பக்தர்கள் நேரடியாக நிலக்கல் வழியாக பம்பை நதியை அடைந்து அங்கிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உச்சிமலையில் நடந்து செல்வார்கள். பம்பை முதல் சபரிமலை வரை நடந்து தான் செல்ல வேண்டும் என்பதால், நடக்கும் வகையில் தான் பாதை உள்ளது.
பொதுவாகவே சபரிமலை ஐய்யப்பன் கோவில் கார்த்திகை, மார்கழி மற்றும் தை முதல் வாரம் திறக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் மண்டல, மகர விளக்கு பூஜை நடைபெறும். இந்த சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கியிருக்கிறது. திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
இந்த ஆப் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐய்யப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், போலீஸ பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்ல விரும்பும் பக்தர்கள் நேராக தேனி வழியாக குமுளியை அடைந்து அப்படியே எரிமேலி வழியாக சபரிமலை செல்வது வழக்கம். பல லட்சம் பக்தர்கள் இந்த வழியாகவே செல்வார்கள். இந்த வழியாக செல்லும் போதும் சரி, திரும்பும் போது சரி, பழனிக்கும் பக்தர்கள் செல்வது வழக்கமாக உள்ளது. சபரிமலை செல்ல சிறப்பு பேருந்துகளும் உள்ளன. ரயில்கள் தேனி வரையில் உள்ளது. இதேபோல் கேரளா வழியாக வந்தால் கோட்டயத்தில் ரயிலில் இறங்கி சபரிமலைக்கு வரலாம்.












Click it and Unblock the Notifications