கேரளா போகும் டிரைவர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..லாரிகளுக்கு புது ரூல்ஸ்.. அரசு பஸ்க்கும் கட்டாயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு புதிய விதியை கேரளா போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. சேஃப் கேரளா என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சுமார் 700 செயற்கை நூண்ணறிவு திறன் கொண்ட கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கிவிட்டது.

இந்த கேமராக்கள் விதி மீறும் வாகன ஓட்டிகளை எளிதில் அடையாளம் காட்டிக் கொடுத்து விடும். அதாவது போக்குவரத்து சிக்னல்களில் வெள்ளைக் கோட்டை தாண்டி நிற்பது, பைக்கில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது என சாலை விதிகளை மீறினால் இந்த ஏஐ கேமராக்கள் படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும்.
இதை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு புகைப்படத்துடன் விதி மீறலுக்கான அபராதத்தையும் சேர்த்தே மெசேஜ் மூலமாக அனுப்பி விடுவார்கள். கேரள அரசின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கேரள ஆளும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதோடு, போக்குவரத்து விதிமீறல்களும் பெருமளவு குறைந்து விட்டதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், கேரளாவில் இனிமேல் கனரக வாகனங்களில் கேபின்களில் இருக்கும் இருவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது லாரி , பஸ் போன்ற கனரக வாகனங்களில் பயணித்தால் கேபினில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் அவருக்கு பக்கவாட்டில் இருக்கும் நபரும் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். இந்த விதி கேரள அரசு பேருந்துகளுக்கும் பொருந்துமாம்.
முன் பக்க இருக்கையில் இருக்கும் பயணிகளும் ஓட்டுநர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- "சாலை பாதுகாப்புக்கு கேரள அரசு தனி கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே சாலையில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த படியாக கனரக வாகனங்களின் டிரைவர் மற்றும் அவருக்கு பக்க வாட்டில் இருந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளோம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சீட் பெல்ட் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வருகிறது" என்றார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தப்பட்டதன் மூலம் விபத்துக்கள் கணிசமாக குறைந்து இருப்பதாக ஆண்டனி ராஜூ கூறினார். இது தொடர்பாக ஆண்டனி ராஜூ கூறுகையில், " நாள் ஒன்றுக்கு விபத்துக்களினால் 12 பேர் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது 7 ஆக குறைந்துள்ளது. சாலை போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் தான் ஏஐ கேமராவை பார்த்து அச்சப்பட வேண்டும். வேறு யாரும் பயப்பட வேண்டியது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications