அதிரும் திருவனந்தபுரம்.. சசி தரூர் vs ராஜீவ் சந்திரசேகர்! கிளைமாக்ஸ் சண்டையில் ஜெயிக்கப் போவது யார்?
திருவனந்தபுரம்: தொடர்ச்சியாக 3 முறை திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்.பியாக இருக்கும் சசி தரூர், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறையைப் போல சசி தரூரின் வெற்றி எளிதாக இருக்காது, காரணம் எதிர்த்து நிற்பது பாஜகவின் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜகவை பொறுத்தவரை 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை பாஜக வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளராக சசி தரூர்: தற்போது காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். அதன்படி, திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் சசி தரூர் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருக்கிறார் சசி தரூர். எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் அவரே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பன்யன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர், இடது முன்னணியின் பன்யன் ரவீந்திரன் என திருவனந்தபுரம் தேர்தல் களம் கடும் போட்டியால் தகிக்கிறது.
சசி தரூரின் கோட்டையாக இருக்கும் திருவனந்தபுரம்: கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திருவனந்தபுரம் எம்.பி.யாக இருந்து வருகிறார் சசி தரூர். கடந்த 2009 லோக்சபா தேர்தலில், சசி தரூர் சுமார் 1 லட்சம் வாக்குகள் (99,998 வாக்குகள்) வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், 2014 ஆம் ஆண்டில், பாஜக வேட்பாளர் ராஜகோபால் சசி தரூருக்கு கடும் சவாலாக இருந்தார். இதனால், அந்த தேர்தலில் சசி தரூர் 15,470 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2019 லோக்சபா தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சசி தரூர்.
2005ஆம் ஆண்டில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் பன்யன் ரவீந்திரன். இவர்தான் தற்போது திருவந்தபுரம் தொகுதி இடது முன்னணி வேட்பாளர். அதற்கு முன்பு காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 3 முறைகளாக இங்கு காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் வெற்றி பெற்று வருகிறார்.
வெல்வது சவால்: பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் களமிறங்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். தனது முதல் மக்களவை தேர்தலை இப்போதுதான் சந்திக்கிறார். திருச்சூர் வம்சாவளியை சேர்ந்தது ராஜீவ் சந்திரசேகரின் குடும்பம். எனவே, திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக அவரை முதல் முறையாக களமிறக்கியுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வென்ற சசி தரூருக்கு இந்த தேர்தல் ஒரு அக்னி பரீட்சை என்றே கூறலாம். இதில் ராஜீவ் சந்திரசேகரை தோற்கடித்து வெற்றி பெற்றால், தொகுதியிலும் சரி, காங்கிரஸ் கட்சியிலும் சரி தனது தனிப்பட்ட செல்வாக்கை அவர் நிலைநிறுத்திக் கொள்வார். ஒருவேளை அவர் தோல்வியடைந்தால், அவரது செல்வாக்கு சரியும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சசி தரூர் பற்றி: முன்னாள் அமைச்சரான சசி தரூர், ஐ.நா சபையின் துணை பொதுச் செயலராகப் பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியா சார்பாக அதிகாரபூர்வமாக முன்மொழியப்பட்டு போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தவர்.
ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார் சசி தரூர். சாகித்ய அகாடமி விருதும் வென்றுள்ளார். 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சசி தரூர் 2009 மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் வென்றார். பின்னர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடியை பாராட்டியதற்காக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீகப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக களமிறங்கி தோல்வியுற்றார்.












Click it and Unblock the Notifications