எங்கள் ஸ்டாப்பில் வந்தே பாரத் நிற்கவில்லை.. உச்சநீதிமன்றம் சென்றவருக்கு நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரயில் மலப்புரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை என பயணி ஒருவரின் புகாருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
இந்தியாவில் 40 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் மக்கள் இதில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த ரயில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும். இதன் வேகம் அதிகம். மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனால் பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும்.
குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் பெரும்பாலான பயணிகள் தங்களது சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்படி ஒரு சூழல் கேரளாவில் அண்மையில் தொடங்கப்பட்ட திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரயிலில் உள்ளது.
இந்த ரயில் பாலக்கோடு மாவட்டத்தின் ஷோர்னுர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் ரயில் நிலையத்தில் நிற்காது, இதனால் 56 கி.மீ. பயணம் செய்து ஷோர்னுர் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் , வந்தே பாரத் ரயிலை திருர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிடவேண்டும் என கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், மனோஜ் மிஸ்ரா, நரசிம்மா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், வந்தே பாரத் ரயில் எங்கு நிற்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா. அடுத்ததாக டெல்லி- மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் நாங்கள் நிறுத்தம் குறித்து அட்டவணை வெளியிட வேண்டுமா? இது கொள்கை அளவில் முடிவு எடுக்கும் விஷயம். அதிகாரிகளிடம் செல்லுங்கள் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரிசீலனை செய்யும்படி அரசை கேட்டுக் கொள்ள வழக்கறிஞர் வலியுறுத்தினார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரிப்பதாக பார்த்தால் நான் அதில் தலையிடமாட்டேன். எந்தெந்த இடத்திற்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்பது ரயில்வே தீர்மானிக்க வேண்டியது. குறிப்பிட்ட ரயில் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க எந்தவொரு தனி மனிதருக்கும் உரிமை கிடையாது என நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications